ஓம் நம சிவாய: பிரதோஷ விரதம் வழிபாடு, பலன்கள்!

210

ஓம் நம சிவாய: பிரதோஷ விரதம் வழிபாடு, பலன்கள்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. பிரதோஷ விரதம்
  2. சோமவார விரதம்
  3. உமா மகேஸ்வர விரதம்
  4. திருவாதிரை விரதம்
  5. மகாசிவராத்திரி விரதம்
  6. கல்யாண விரதம் (கல்யாண சுந்தரர், கல்யாண சுந்தர விரதம்)
  7. பாசுபத விரதம்
  8. அஷ்டமி விரதம்
  9. கேதாரகௌரி விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது பிரதோஷ விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிரதோஷ விரதம்:

பொதுவாக ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில், குறைந்த து ராகு தோஷம், கேது தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், நவக்கிரக தோஷங்கள், பிதுர் தோஷங்கள் என்று குறைந்தது 4 தோஷங்கள் இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு வர அனைத்து தோஷங்களும் நீங்கும். ஏன், சிவபெருமானையே பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, பிச்சையெடுக்கும் நிலை கூட வந்தது.

வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று இரு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவன் கோயில் சென்று சிவனை வழிபட வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்து சிவனை தரிசித்த பிறகு உண்ண வேண்டும்.

பிரதோஷ வேலை அதாவது மாலை 4.30 மணி முதல் 6 வரையில் சிவனுக்கு பிடித்த வில்வம் அல்லது நாகப்பூ, இளநீர், பால், பன்னீர், தேன், நெய், பழங்கள், சந்தனம், சர்க்கரை, எண்ணெய் வாங்கி சென்று அபிஷேகத்திற்கு கொடுக்கலாம். பிரதோஷம் நடக்கும் நேரம் முழுவதும் கோயிலில் இருந்து சிவனை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும்.

பிரதோஷத்தன்று நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும். பிரதோஷத்தன்று தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் வலம் வருவதை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

பிரதோஷ விரதம் இருக்க நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனி பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்க வேண்டும். இதுதான் மரபு.

பிரதோஷ விரத பலன்கள்:

பிரதோஷ தினத்தன்று சிவனை வழிபாடு செய்வதால் வறுமை அகலும், திருமணத்தடை நீங்கும். எதிரிகள் தொல்லை இருக்காது. அனைத்து துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.

ஓம் நம சிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…