கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்வர்ண கௌரி விரதம்!

84

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்வர்ண கௌரி விரதம்!

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் தான். ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் என்று பல விசேஷமான நாட்கள் இந்த ஆடி மாதத்தில் வரும். இந்த நாட்களில் அம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படும். அந்த வகையில், ஆகஸ்ட் 11 ஆடி 26ஆம் தேதி ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படும் ஒரு விசேஷமான நாள் தான் ஆடிப்பூரம். இந்த நாள் தேவிக்குரிய நாள் என்றும், அம்மன் ஜெயந்தி (அம்மன் பிறந்தநாள்) என்றும், உமாதேவி அவதரித்த நாள் என்றும், பூமாதேவியும் இந்த நாளில் தான் ஆண்டாளாக அவதரித்தார் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்வர்ண கௌரி பூஜை விரதம்:

ஆடிப்பூரம் நாளில் தான் ஸ்வர்ண கௌரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. கௌரி தேவியின் 16 வடிவங்களில் ஸ்வர்ண கௌரி விரதம் மிகவும் முக்கியமானது. கணவன் – மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா என்று வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஸ்வர்ண கௌரி விரதத்தை கடைபிடிப்பதாக சொல்லப்படுகிறது.

பிரளயத்தின் போது தோன்றிய ஸ்வர்ண லிங்கத்தை முக்கோடி தேவர்களும் பூஜித்து வழிபட்டனர். அப்போது, நாட்டு மக்களை காப்பதற்காக பிரகாசத்துடன் சிவபெருமான் மற்றும் உமையன்னை தோன்றினர். பிரகாசத்துடன், ஸ்வர்ண மயமாகத் தோன்றிய கௌரி தேவியை அனைவரும் பூஜித்து வழிபட்டனர்.

ஸ்வர்ண கௌரி விரதம் புராண கதை:

சிவபெருமானிடம், கந்த பெருமான் ஸ்வர்ண கௌரி விரதம் இருப்பதற்கான காரணம் அனுஷ்டிக்கும் முறை பற்றி விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். ஒரு காலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற நகரத்தை சந்திரபிரபன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். சந்திரபிரபனுக்கு இரு மனைவிகள்.

முதல் மனைவி மீது தீராத பிரியமும், காதலும் கொண்டிருந்தான். ஒரு நாள் சந்திரபிரபன் வேட்டையாடுவதற்கு காட்டிற்கு சென்ற போது, ஒரு குளக்கரை மீது அமர்ந்து அப்சரஸ்கள் என்று சொல்லப்படும் தேவ கன்னிகள் விரதம் இருந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று இந்த விரதம் எதற்காக, என்ன பலன் என்பது குறித்து எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டான்.

நோன்புச் சரடு:

இது ஸ்வர்ண கௌரி விரதம். இதனை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் இருப்பதனால், எல்லா நலமும் கிடைக்கும் என்று அந்த அப்சரஸ்கள் என்று சொல்லப்படும் தேவ கன்னிகள் (தேவ பெண்கள்) கூறினார்கள். அவர்கள் கூறியதைக் கேட்டு தானும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதிய சந்திரபிரபன் 16 முடிச்சுகள் கொண்ட நோன்பு சரடைக் கையில் கட்டிக் கொண்டான்.

பின்னர், காட்டிலிருந்து அரண்மனைக்கு சென்றதும், தன் மனைவிகளிடம் ஸ்வர்ண கௌரி விரதம் குறித்து கூறினான். இதைக் கேட்ட முதல் மனைவி நோன்புச் சரடை அறுத்தெறிந்தாள். அந்த நோன்புச் சரடானது அரண்மனை தோட்டத்திலிருந்த ஒரு பட்டுப்போன மரம் மீது விழுந்த து. உடனே அந்த பட்டுப்போன மரமானது துளிர்க்கத் தொடங்கியது. இதைக் கண்ட சந்திரபிரபனின் 2ஆவது மனைவி அந்த நோன்புச் சரடை எடுத்து அவளது கையில் கட்டிக் கொண்டாள்.

நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்ட 2ஆவது மனைவி மீது சந்திரபிரபனுக்கு காதல் பொங்கி வழிந்தது. அவர் மீது அதிக பிரியம் கொண்டான். முதல் மனைவியை வெறுத்து ஒதுக்கினான். இதனால், விரக்தியடைந்த முதல் மனைவி காட்டிற்கு சென்று, தேவியை நினைத்துக் கொண்டே முனிவர்களின் ஆசிரமங்களை சுற்றி வந்து தனது தவறுக்காக மனம் வருந்தினாள். ஆனால், முனிவர்களோ அவளை விரட்டினர்.

பின்னர், குளக்கரைக்கு வந்த முதல் மனைவி, மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு அங்கு சென்றாள். ஆனால், வன தேவதையோ அவளை விரட்டினாள். இதையடுத்து, தனது தவறை நினைத்து மனம் நொந்து போன சந்திரபிரபனின் முதல் மனைவி கௌரி தேவியை நினைத்து தேவியிடம் மன்னிப்பு வேண்டினால்.

அவரது வேண்டுதலில் மனமகிழ்ந்த கௌரி தேவி, அவள் முன் தோன்றினாள். உடனே முதல் மனைவி கௌரி தேவி விரதம் இருந்து, தேவியிடமிருந்து சௌபாக்ய வரம் பெற்று தனது அரண்மனைக்குச் சென்றாள். அங்கு, முதல் மனைவியை உற்சாகமாக வரவேற்ற சந்திரபிரபன் அவருடன் நீண்ட காலம் ஒற்றுமையாக வாழ்ந்தான். இது தான் ஸ்வர்ண கௌரி விரதத்தின் மகிமை. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர இந்த விரதத்தை கடைபிடிப்பது நல்லது.

ஸ்வர்ண கௌரி பூஜை:

ஸ்வர்ண கௌரி விரதம் இருப்பதற்கு முதல் நாளே வீட்டில் பூஜையறை எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கௌரி தேவி விக்ரகம் அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல் பூஜைக்கு தேவையான பொருட்கள்: மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, தயிர், பால், தேன், வெல்லம், நெய் என்று அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் செய்து வைக்க வேண்டும். மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கலசத்தில் அலங்கரித்த அம்மனை வைக்க வேண்டும். அதன் மீது நோன்பு சரடு வைக்க வேண்டும். மண்டபம் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். நீங்கள் வடக்கு பார்த்து அமர்ந்து அம்மனை பூஜிக்க வேண்டும். ஒரு பக்கம் நெய் விளக்கு மறுபக்கம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அப்போது, நோன்பு சரடை எடுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.

சரடு கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச

ஹரித்ரம் தாராம்யஹம்

பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்

ஸுப்ரீத பவ ஸர்வதா

இந்த விரத த்தை அனுஷ்டிக்கும் திருமணமான பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு, கணவன் – மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.