கணவன் மனைவி ஒற்றுமையை பறைசாற்றும் சரஸ்வதி பிரம்மா கோபம் – சாபம்!

94

கணவன் மனைவி ஒற்றுமையை பறைசாற்றும் சரஸ்வதி பிரம்மா கோபம் – சாபம்!

கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை இருக்க வேண்டும். இருவருக்கும் இடையில் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும் இருக்க வேண்டும். இரண்டும் இல்லையென்றால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய வேண்டிய நிலை தான் ஏற்படும் என்பதைத் தான் இந்த சரஸ்வதி பிரம்மா கோபம் சாபம் வரலாற்றுக் கதை உணர்த்துகிறது. இது குறித்து தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்…

சத்தியலோகத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் பேசும் வார்த்தை தான் அவரது அன்பையும், பண்பையும் காட்டுகிறது. அவரது உயர்வுக்கும் அது தான் காரணமாகவும் அமைகிறது என்று சரஸ்வதி கூறினார். இதைக் கேட்ட பிரம்மா, இல்லை தேவி. ஒருவரது பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு அவரது உண்மையான பண்பை யாராலும் கண்டறிய முடியாது.

தற்போது எவரிடமும் உண்மையான அன்பும், பண்பும் இல்லை. தவறான எண்ணங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியில் நல்லவர்களைப் போன்று நாடகமாடிக் கொண்டு தான் பேசுகிறார்கள். அப்படியிருக்கும் போது பேச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றார்.

இது சரஸ்வதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நீங்கள் வேண்டுமென்றே மறுத்து பேசுகிறீர்கள். நீங்கள் பேசுவதில் எந்த உண்மையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார். இதற்கு பிரம்மா, ஒருவரது பேச்சை விட அவரது நடை, உடை, பாவணை ஆகியவை தான் அவரது அன்பையும், பண்பையும் காட்டும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது. ஆனால், பேச்சு அப்படியில்லை. சில நேரங்களில் நாம் விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் கூட மற்றவர்களுக்கு தவறாக தோன்றும். அப்படியில்லை என்றால் அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

என்னதான் நல்லவராக திகழ்ந்தாலும் நாம் பேசும் சில பேச்சு, அவர்களிடம் நம்மை தீயவர்களாக காட்டி விடும் என்று பிரம்மா கூறினார். இது சரஸ்வதிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. பேச்சுத் திறன் மற்றும் கலைகளுக்கு அரசியான என்னை கோபப்படுத்தவே இது போன்று நீங்கள் பேசுகிறீர்கள் என்றார்.

இதற்கு பிரம்மா, விளையாட்டாக சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ஏதாவது ஒரு வழியில் விபரீதத்தை ஏற்படுத்தி விடும். கடுமையான வார்த்தைகள் கூட கலகத்தை ஏற்படுத்தி விடும். கனிவான பேச்சு மட்டுமே எப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் அவர்களை கரைத்து அன்புடையவர்களாக மாற்றிவிடும்.

பேசுவதன் மூலமாக ஒருவரது பண்பு தெரிவதில்லை. உன்னைப் போன்ற பெண்களுக்கு இது போன்ற எந்த உண்மையும் புரியாது என்று ஒட்டுமொத்த பெண்களைப் பற்றி பிரம்மா கூறினார். இது சரஸ்வதிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆண்கள் மட்டும் எதையும் பேசலாம், எதையும் செய்யலாம். ஆண்கள் சொல்வது மட்டுமே சரி, பெண்கள் செய்வது தவறு. பெண்கள் எதையும் பேசக் கூடாது. எதையும் செய்யக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று சொல்ல வேண்டும்.

படைப்புத் தொழில் புரியும் பிரம்மாவிற்கு இது போன்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கும். அப்படியிருக்கும் போது அவர் படைக்கும் ஆண்களுக்கும் இது போன்ற எண்ணம் தான் இருக்கும். தன்னைப் பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல், தான் புரிந்து வரும் படைப்புத் தொழிலையும் சேர்த்து சரஸ்வதி குறை கூறியது, அவர் மேல் கோபத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக, நீ எந்தப் பேச்சைப் பெரிது, மேலானது என்று நினைத்து படைக்கும் தொழில் புரிந்து வரும் பிரம்மாவான என்னை குறைவாக பேசினாயோ அந்தப் பேச்சு இல்லாதவளாக பிறந்து பூலோகத்தில் கஷ்டப்படுவாய் என்று சாபமிட்டார். ஆண்கள் சொல்வதை எல்லாம் பெண்கள் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க வேண்டும் என்பதில், பிரம்மாவும் விதிவிலக்கல்.

நீங்கள் கொடுத்த சாபத்தால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, உங்களிடம் வந்து எனக்கு சாப விமோட்சனம் கொடுங்கள் என்று நான் எதுவும் கேட்கப் போவதில்லை. ஆனால், உண்மையில் எனக்கு கொடுத்த சாபத்தால் நீங்கள் தான் அதிகளவில் துன்பப்படுவீர்கள் என்று கூறிய சரஸ்வதி பூலோகத்தை நோக்கிச் சென்றார்.

பிரம்மாவின் சாபத்தின் படி, சரஸ்வதி ஒரு ஏழ்மையான குடும்பத்தில் வாய் பேச முடியாதவளாக வாணி என்ற பெயரில் பிறந்து வளர்ந்தாள். ஆனால், வாணி யாழி இசைப்பதில் சிறந்தவளாக திகழ்ந்தாள். ஒவ்வொரு நாளும் சிவபெருமான் கோயில்களுக்குச் சென்று யாழை மீட்டி பேச்சுத் திறன் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள்.

ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனக்கு பேச்சு திறன் வேண்டி பிரார்த்தனை செய்த வாணி வேதாரண்யம் என்ப்படும் திருமறைக்காடு பகுதிக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானை வழிபட்டார். அப்போது வாணியே வருத்தப்படாதே. விரைவில், பேச்சுத்திறன் வரும் என்று அம்பாளின் அசரீரி ஒலித்தது. அம்பாளின் குரல் கேட்டு வியந்த வாணி, சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கிவிட்டு மற்றொரு சிவன் கோயிலுக்குச் சென்றார்.

வாணியாக பிறந்த சரஸ்வதி தேவி ஒவ்வொரு சிவன் கோயிலாக சென்று வர, பிரம்மா உலகத்தின் நன்மைக்காக வேள்வி ஒன்றை நடத்த விரும்பினார். தான் நடத்தும் வேள்வியில் தனது மனைவி சரஸ்வதியும் உடனிக்க வேண்டும் என்று பிரம்மா விரும்பினார். இதற்காக கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார். அதற்கு சிவபெருமானோ, சரஸ்வதி தேவி விரைவில் உங்களுடன் சேரும் நாள் வரும் என்றார்.

இதையடுத்து, சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரும் இணைந்து அடியவர்களைப் போன்று வேடமிட்டு வாணி இருக்கும் இடத்திற்குச் சென்றனர். பின்னர் வாணியிடம் யாழ் மீட்டிக் காட்டும்படி கேட்டனர். அதற்கு வாணியும் அடியவர்களுக்காக யாழ் மீட்டினார். வாணியின் இசையைக் கேட்டு மகிழ்ந்த சிவனும், பார்வதியும், உனது யாழ் இசையோடு உனது பாடலையும் கேட்க விரும்புகிறோம். வாய் திறந்து பாடு என்றனர். ஆனால், தனக்கு பேச்சு வராது என்று செய்கையால் உணர்த்தினாள். இருவரும், உன்னால் முடியும் என்று கூறி வாணியை பாடும்படி வற்புறுத்தினர். இதையடுத்து, வாணி பாடுவதற்காக முயற்சிக்க, அவர்களது அருளால் அவளுக்கு குரல் வந்தது. இறைவனை வாழ்த்தி பாடல் பாடினாள்.

குரல் வந்த து பிறகு தான் தான் சரஸ்வதி என்பதையும், தனது கணவர் பிரம்மாவால் சாபம் பெற்றதையும் அறிந்து கொண்டாள். மேலும், அடியவர்களைப் போன்று வந்திருப்பது சிவனும், பார்வதியும் என்பதையும் தெரிந்து கொண்டாள். மேலும், அவர்களை வணங்கினாள். இதையடுத்து, அவளை வாழ்த்திய சிவபெருமான், கலைவாணியே! நீ என்னை வாழ்த்தி பாடல் பாடிய இந்த இடம் உனது பெயருடன் சேர்த்து அழைக்கப்படும்.

ஆரம்பத்தில் வாணியம்மைபாடி என்று அழைக்கப்பட்ட இந்த இடமானது, தற்போது வாணியம்பாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் உனக்கென்று தனி சன்னதி அமையும் என்று சிவபெருமான் அருள் புரிந்தார். சிவனின் அருளால் சாப விமோட்சனம் பெற்ற சரஸ்வதிக்கு இன்னமும் கோபம் குறையவில்லை.

எனவே, விஷ்ணு பகவானை அழைத்து சரஸ்வதியை சமாதானப்படுத்துபடி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக, விஷ்ணு பகவானும் சரஸ்வதியிடம் பேசி, அவரது கோபத்தைக் குறைத்தார். தனது கணவரான பிரம்மாவுடன் இணைந்து உலக நன்மைக்காக வேள்வி செய்தார்.

இதன் மூலமாக யார் ஒருவர் விட்டுக் கொடுத்திருந்தாலும் இது போன்ற சாபம் பெற்றிருக்க நேரிட்டிருக்காது. ஆனால், இருவருமே தங்களது கருத்துக்களில் உறுதியாக இருந்த நிலையில், இது போன்ற கோபமும், சாபமும் ஏற்பட்டது.