கந்தசஷ்டி சூரசம்ஹாரம்: மச்சான் சாமி, மாப்பிள்ளை சாமி வரலாறு!

283

கந்தசஷ்டி சூரசம்ஹாரம்: மச்சான் சாமி, மாப்பிள்ளை சாமி வரலாறு!

மீனவர் குலத்தில் பிறந்த தேவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரன். இவரது மகள் தெய்வானை. தமிழ் கடவுள் முருகப் பெருமான் முதலில் இந்திரனின் மகளான தெய்வானையை மணமுடித்தார். இதனால், மீனவர்கள் குலத்திற்கு முருகப் பெருமான் மச்சான் சாமியாக திகழ்கிறார். ஆறுமுகப் பெருமானின் உற்சவர் குமாரவிடங்க பெருமான். ஆதலால், குமாரவிடங்க பெருமாள் மாப்பிள்ளைச் சாமியாக கருதப்படுகிறார். மாப்பிள்ளைச் சாமியான இந்த குமாரவிடங்க பெருமாளை வணங்குபவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயில் குரு பகவான் பூஜித்த தலமாக விளங்குகிறது. குரு திசை, புத்தி நடப்பவர்களும், திருமணத் தடை உள்ளவர்களும் இத்தலம் வந்து முருகப் பெருமானை வணங்கி வழிபட திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். கந்த ச ஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமணத் தடை நீங்கும், காரியங்களில் வெற்றி உண்டாகும். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினமான இந்த சஷ்டி விரதமானது 6 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த 6 நாட்களும் முருகப் பெருமானை நினைத்து விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். தீராத நோய் தீரும். வயிற்று வலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதியில் கந்த சஷ்டி கவசம் பாடினால், அந்த வயிற்று வலி கூட குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

குரு பரிகாரத் தலமாக திகழும் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் குரு பகவான் வழிபட்டு தனது யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். பிரம்மாவின் மகனான தட்சன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட கர்வத்தால் அவரையே மதிக்காமல் யாகம் செய்தான். இந்த யாகத்தில் தேவர்கள் கலந்து கொண்டதால், சிவனின் பாவத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக தேவர்களின் வலிமை குறைந்து காணப்பட்டது.

மேலும், சூரபத்மனுக்கு தேவர்கள் பயந்து ஓடி மறைந்தனர். தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிட வேண்டும் என்று அசுர வேந்தன் அழைந்து திரிந்தான். இதற்கெல்லாம் தீர்வு என்ன செய்வதென்று குரு பகவான் யோசித்துக் கொண்டிருந்தார். அந்த யோசனையிலேயே சூரபத்மனின் தலைநகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் வந்தார்.

அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து சிவனை நினைத்து தவம் மேற்கொண்டார். அப்போது கயிலையில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னியாக உதித்த குமாரனைக் கண்டார் குரு பகவான். அன்னை பார்வதியின் சிலம்பிலிருந்து வீரமகேந்திரன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன், வீர புரந்தரன், வீர ராட்சசன், வீர மகேசன், வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகிய நவ வீரர்கள் தோன்றினர். கார்த்திகைப் பெண்கள் மூலமாக வளர்ந்த முருகப் பெருமான் மற்றும் அந்த நவ வீரர்கள் இணைந்து சூரபத்மனை வதம் செய்ய படை திரட்டி குரு பகவான் தவமிருக்கும் கானகத்திற்கு வந்தனர்.

அப்போது சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும், முருகப் பெருமானிடம், குரு பகவான் கூறினார். மேலும், முருகப் பெருமான் அங்கிருந்து செல்வதற்கு முன்னதாக, தாங்கள் தவமிருந்த இத்தலத்தில் இருவரும் சம்மாக மதிக்கப்படுவோம் என்று கூறினார். சூரபத்மனுடன்னான யுத்தம் முடிந்து, நான் இந்தப் பகுதியில் கோயில் கொள்ளும் போது, இந்தப் புண்ணையப்பதி தங்களது பெயரால், குரு ஸ்தலமாக விளங்கும் என்று முருகப் பெருமான் கூறினார். அப்போது முதல், திருச்செந்தூரில் குரு பகவானாகவும், புத்திர பாக்கியம் அருளும் தேவனாகவும், ஞானம் அருளும் குருவாகவும் பக்தர்களுக்கு குரு பகவான் அருள் பாலிக்கிறார்.

யுத்தம் நடந்த இடம் என்பதால், செந்திலாண்டவர் கோயில் அருகிலுள்ள கடல் நீர் சற்று சிவந்து ரத்த நிறத்திலிருக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியானது கடற்கரையில் நிகழ்ந்த நிலையில் கடல் நீர் உள்வாங்கும் ஒரு அற்புத நிகழ்வும் நடக்கிறது. சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் முடிந்ததும், செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு சாயாபிஷேகம் என்று பெயர்.

சூரனை வதம் செய்ய தனது படைவீரர்களுடன் சென்ற முருகப் பெருமான் அவர்களஹ்டு தாகம் தணிப்பதற்கு வேலாயுதம் கொண்டு நீர் ஊற்று ஒன்றை உருவாக்கியதாக கந்த புராணம் கூறுகிறது. ஒரு சதுர அடி பரப்பளவில் அந்த நீர் ஊற்றானது திகழ்கிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்று கூறுகின்றனர். மேலும், இந்த நீர் ஊற்றானது ஒருபோதும் வற்றாமல் இருப்பதால் இதற்கு நாழிக் கிணறு என்றும் பெயர் உண்டு. இதில் நீராடிய பிறகு கந்தனை தரிசிக்க வேண்டும்.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் முருகப் பெருமான் தனது தந்தையான சிவபெருமானை தரிசிப்பதற்காக எழுந்தருள்கிறார். மாமரமாக மாறிய சூரபத்மனை தனது வேலாயுதம் கொண்டு இரண்டாக பிளந்தார் முருகப் பெருமான். இதன் காரணமாக அந்த மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும் மாறியது.