கந்த சஷ்டி முதல் சூரசம்ஹாரம் வரை 6 நாட்கள் விரதம்!

195

கந்த சஷ்டி முதல் சூரசம்ஹாரம் வரை 6 நாட்கள் விரதம்!

சிவனுக்கு உகந்தது பிரதோஷம் என்றால், முருகனுக்கு உகந்தது கந்த சஷ்டி. இந்த கந்த சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வந்தால் தீராத நோய்கள் தீரும், திருமணம் கை கூடி வரும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் தொடங்கி சஷ்டி வரை வரும் 6 நாட்களும் உமிழ் நீர் கூட விழுங்காதவாறு முருகப் பெருமானை நினைத்து நோன்பிருந்து சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் இருக்கும் போது மறந்தும் கூட இதனை செய்துவிடக் கூடாது.

எலுமிச்சம் ஜூஸ், இளநீர், உப்பு நீர், நாரத்தம் பழச்சாறு ஆகியவற்றை விரதம் இருப்பவர்கள் அருந்தக் கூடாது. சஷ்டி முதல் சூரசம்ஹாரம் வரையில் எப்போதும் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு முருகப் பெருமானை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பிற்பகல் நேரத்தில் ஒரு பொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து சாப்பிட வேண்டும்.

காலை மற்றும் இரவு நேரங்களில் பால், பழங்கள் சாப்பிடலாம். ஆனால், இதில், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு. அவர்களது உடல் நலத்திற்கு ஏற்ப உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மேலும், இரு வேளையிலும் முருகனுக்கு பூஜை செய்து கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

முருகப் பெருமானை வழிபடும் போது கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். தினந்தோறும் ஒருவருவருக்கு தானம் செய்ய வேண்டும். விரதமிருக்கும் 6 நாட்களும் முருகன் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். மேலும், அந்த 6 நாட்களும் கந்த புராணம் படிப்பது அவசியம். சஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும்.

சஷ்டி விரதம் இருப்பவர்கள் 6 நாட்களும் விரதம் இருக்க முடியவில்லை என்றால், சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். இந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் அசைவ உணவு சாப்பிடக் கூடாது. மது அருந்தவும் கூடாது. கணவன் மனைவி உறவு கொள்ள கூடாது. இரவு நேரத்தில் கட்டில் மெத்தை கூடாது. வெறும் தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும். முருகனுக்கு மாலை அணிந்திருந்தால் எப்படி இருப்போமோ அப்படி இருந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சூரசம்ஹார நாளன்று அதிகாலையில் குளித்து முடித்து நெற்றியில் விபூது, சந்தனம், குங்குமமிட்டுக் கொள்ள வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி, சஷ்டி விரத த்தின் முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் மனமுருகி வேண்ட வேண்டும்.

ச ஷ்டி விரத த்தின் 6ஆவது நாள் சூரனை வதம் செய்த முருகப் பெருமானின் கோலத்தை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு திருச்செந்தூர் கடலிலோ அல்லது நீர் நிலைகளிலோ நீராட வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் வீடுகளில் நீராட வேண்டும். நீராட பிறகு அருகிலுள்ள முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். முடிந்தால் மாவிளக்கு போட வேண்டும். பச்சரிசி சாதம் சாப்பிட்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஒரு சிலர் சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் முருகன் கோயிலில் நடக்கும் பாவாடை நைவேத்தியத்தை தரிசனம் செய்த பிறகே உணவருந்த வேண்டும் என்று இருப்பார்கள். இந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு முருகனின் அருளால் திருமண வரன் கை கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புகழ், செல்வம் பெருகும். நிம்மதியும், சந்தோஷமும் கைகூடி வரும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று கூறுவார்கள். உண்மையில், சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது தான் அர்த்தம். மேலும், சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு முருகப் பெருமானைப் போன்று இல்லை இல்லை முருகனே குழந்தையாக பிறப்பான் என்றும் கூட சொல்வார்கள்.