கருடனுக்கு, கருடாழ்வார் என்று பெயர் வர காரணம் என்ன?

219

கருடனுக்கு கருடாழ்வார் என்று பெயர் வர காரணம் என்ன?

ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசையைத் தொடர்ந்து, வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி ஆகும். சப்தரிஷிகளுள் ஒருவரான காஷ்யபர் (காசிபர், காசியப்பர்) மற்றும் தட்சனின் 13 மகள்களில் ஒருவரான வினதா (வினதை) தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தான் கருடன். கருடன் என்பதற்கு சுமையை சுமப்பவன் என்பது பொருள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த கருடன் பெரிய திருவடியாக போற்றப்படுகிறார்.

கருடன் பிறப்பு:

கட்டைவிரலை விட சிறிய உருவமும், பெரும் தவ ஆற்றலும் கொண்ட 60 ஆயிரம் பேர் கொண்ட முனி கூட்டத்தவர்கள் தான் வாலகில்ய முனிவர்கள். இவர்களின் தவ ஆற்றலால் பிறந்த வினதாவிற்கு பிறந்தவர் கருடன். இவர், முதலில் இந்திரனுக்கு எதிரியாகவும், அதன் பின்னர் நண்பராகவும் விளங்குவார் என்று அந்த வாலகில்ய முனிவர்கள் கூறினர்.

கருடன் பெயர்க்காரணம்:

மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த வாலகில்ய முனிவர்களை கருடன் காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருள்படும்படி, கருடன் என்று பெயர் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருடாழ்வார் பெயர்க்காரணம்:

இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதன். ஆனால், பிரகலாதன் நாராயணன் மீது பற்று கொண்டவர். தந்தையோ தான் தான் கடவுள் என்று எண்ணிக் கொள்பவர். இரண்ய கசிபுவை வதம் செய்து தனது பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றவே பெருமாள் எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.

தனது பக்தன் பிரகலாதனைக் காக்க இரண்யனின் அரண்மணை தூணில் பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்ததால், கருடன் மேல் வராமல் தனியாக வந்தார். இதனால், மன வேதனை அடைந்த கருடன், நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்சி அருள வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினார்.

இதையடுத்து, அஹோபிலம் சென்று தவம் செய்யும் படியும், தான் அங்கு வந்து நரசிம்ம அவதா காட்சி தருவதாகவும் பெருமாள், கருடனிடம் கூறினார். பெருமாள் கூறியதைத் தொடர்ந்து, கருடன் அஹோபிலம் மலையடிவாரக் கோயிலில் தவம் செய்ய, அவருக்கு உக்ர நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் காட்சியளித்தார். பக்தி மற்றும் பெருமாள் சேவையே பெரிது என்று எண்ணி அவரை சரணடைந்ததால், கருடன், கருடாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.