கருட பஞ்சமி: கருடன் (கருடாழ்வார்) பிறந்த தினம்!

119

கருட பஞ்சமி: கருடன் (கருடாழ்வார்) பிறந்த தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசையைத் தொடர்ந்து, வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி ஆகும். சப்தரிஷிகளுள் ஒருவரான காஷ்யபர் (காசிபர், காசியப்பர்) மற்றும் தட்சனின் 13 மகள்களில் ஒருவரான வினதா (வினதை) தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தான் கருடன். கருடன் என்பதற்கு சுமையை சுமப்பவன் என்பது பொருள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த கருடன் பெரிய திருவடியாக போற்றப்படுகிறார்.

கருடன் பிறப்பு:

கட்டைவிரலை விட சிறிய உருவமும், பெரும் தவ ஆற்றலும் கொண்ட 60 ஆயிரம் பேர் கொண்ட முனி கூட்டத்தவர்கள் தான் வாலகில்ய முனிவர்கள். இவர்களின் தவ ஆற்றலால் பிறந்த வினதாவிற்கு பிறந்தவர் கருடன். இவர், முதலில் இந்திரனுக்கு எதிரியாகவும், அதன் பின்னர் நண்பராகவும் விளங்குவார் என்று அந்த வாலகில்ய முனிவர்கள் கூறினர்.

புராண வரலாறு: தாய் அடிமை!

ஒரு சமயத்தில் வான த்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையினுடைய வாலின் கலர் என்ன என்பது குறித்து நாகர்களின் தாய் கத்ரு, கருடனின் தாயான வினதாவிடம் கேட்டார். இதற்கு தவறான பதில் சொன்னால், தனக்கு அடிமை என்றும் அவர் குறிப்பிட்டார். வினதாவோ குதிரையின் நிறம் வெண்மை என்று கூற, கத்ரு, தன் கருநிற பாம்புக் குழதைகளிடம் குதிரையில் நிறத்தை கருமையாக மாற்ற கட்டளையிட்டாள். அதற்கேற்ப, கருநிற நாகர்களும் குதிரையின் வாலை சுற்றவே அது கருநிறமாக மாறிவிட்ட து. இதனால், வினதாவின் கூற்று தவறாக, கத்ருவுக்கு அடிமையானாள்.

அடிமையிலிருந்து விடுதலை:

தனது தாய் அடிமைப்பட்டுள்ளதை அறிந்த கருடன், கத்ருவிடம் சென்று, தனது தாயை விடுவிக்குமாறு வேண்டினான். ஆனால், அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வர வேண்டும் என்றாள். அதற்கு கருடனும், தேவ லோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்து, தனது தாயை மீட்டார்.

தர்ப்பைப்புல் மீது வைக்கப்பட்ட அமிர்த கலசத்தை நாகர்களால் கடலில் குளித்துவிட்டு வருவதற்குள் இந்திரன் அமிர்த கலசத்தை எடுத்து சென்றுவிட்டார். இதனால், ஏமாந்து போன நாகர்கள், அமிர்த கலசம் வைக்கப்பட்ட தர்ப்பைப் புல்லை நாக்கால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

கருடன் பெயர்க்காரணம்:

மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த வாலகில்ய முனிவர்களை கருடன் காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருள்படும்படி, கருடன் என்று பெயர் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருட மந்திரம்:

தத்புருஷாய வித்மஹே

ஸீபர்ண பஷாய தீமஹீ

தன்னோ கருட ப்ரசோதயாத்

யார் ஒருவர் தொடர்ந்து கருடனின் இந்த மந்திரத்தை உச்சர்த்து வந்தால், அவருக்கு தனது சக்தியின் ஒரு துளியை கருடன் தந்தருள்வார் என்பது ஐதீகம். கருடன், கடவுளாகவும், பெருமாளின் வாகனம் மற்றும் கொடியாகவும் ஏற்று வணங்கப்படுகிறார்.

வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று கருடனுக்கு வரமளித்து தனது வாகனமாக பெருமாள் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கருடாழ்வார் பெயர்க்காரணம்:

இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதன். ஆனால், பிரகலாதன் நாராயணன் மீது பற்று கொண்டவர். தந்தையோ தான் தான் கடவுள் என்று எண்ணிக் கொள்பவர். இரண்ய கசிபுவை வதம் செய்து தனது பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றவே பெருமாள் எடுத்த அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். தனது பக்தன் பிரகலாதனைக் காக்க இரண்யனின் அரண்மணை தூணில் பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்ததால், கருடன் மேல் வராமல் தனியாக வந்தார். இதனால், மன வேதனை அடைந்த கருடன், நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்சி அருள வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினார்.

இதையடுத்து, அஹோபிலம் சென்று தவம் செய்யும் படியும், தான் அங்கு வந்து நரசிம்ம அவதா காட்சி தருவதாகவும் பெருமாள், கருடனிடம் கூறினார். பெருமாள் கூறியதைத் தொடர்ந்து, கருடன் அஹோபிலம் மலையடிவாரக் கோயிலில் தவம் செய்ய, அவருக்கு உக்ர நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் காட்சியளித்தார். பக்தி மற்றும் பெருமாள் சேவையே பெரிது என்று எண்ணி அவரை சரணடைந்ததால், கருடன், கருடாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.

கருட பஞ்சமி:

ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமியில் பெருமாளின் வாகனமாக கருதப்படும் கருடாழ்வார் அவதரித்த நாள் கருட பஞ்சமி நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில், பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். முதலில் கருடாழ்வாரை, கருடனை வழிபட்ட பிறகேதான் இந்த நாளில் மூலவரை வழிபட வேண்டும் என்று வைணவ சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.