கார்த்திகை தீபம் யாருக்குரியது தெரியுமா? சிவனுக்கு இல்லையா?

43

கார்த்திகை தீபம் யாருக்குரியது தெரியுமா? சிவனுக்கு இல்லையா?

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் கூடி வரும் நாள் கார்த்திகை தீப திருநாள் ஆகும். இந்த நாள் முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படுவதில்லை. சிவனுக்கும் இல்லையா? சிவன் கோயிலில் வளம் வரும் போது மூலவரது கருவறைக்குப் பின்புறம் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் லிங்கோத்பவருக்காகத் தான் இந்த கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.

படைத்தல் தொழில் புரியும் பிரம்மாவுக்கும், காக்கும் தொழில் புரியும் விஷ்ணு பகவானுக்கும் இடையில் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி வந்த்து. இருவருமே அழிக்கும் தொழில் புரியும் ஈசனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என்று தாங்கள் தான் கூற வேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு ஈசனோ ஜோதி வடிவமாய் விண்ணுக்கும், மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று, தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என்று சிவபெருமான் சொல்லிவிடுகிறார்.

இதையடுத்து, விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து மண்ணை குடைந்து செல்கிறார். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் அவரால் சிவனின் அடியை காண முடியவில்லை. இதே போன்று அன்னப் பறவையாகி விண்ணுலகம் சென்ற பிரம்மாவும் முயற்சிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து வழியில் ஒரு தாழம்பூவைக் காண்கிறார்.

நீ எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மா தாழம்பூவிடம் கேட்க அதற்கு அந்த தாழம்பூ, நான் ஈசனின் தலையிலிருந்து வருகிறேன் என்று கூறியுள்ளது. அவரது தலை இன்னும் எவ்வளவு தூரம் என்று பிரம்மா கேட்க, நானே 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருக்கிறேன் என்று கூற பிரம்மாவே அதிர்ந்துவிட்டார்.

சரி, நான் சொல்வதை அப்படியே சிவனிடம் சொல் என்று தாழம்பூவிடம் பிரம்மா ஒன்று கேட்டார். அதாவது, நான் உன்னை தலையிலிருந்து எடுத்து வந்ததாக சிவனிடம் சொல் என்று கட்டளையிட்டார். அப்படியே இருவரும் சொல்லி சிவனிடம் மாட்டிக் கொண்டனர்.

இதனால், கோபம் கொண்ட சிவன், பிரம்மதேவனாகிய உனக்கு இனி பூலோகத்தில் பக்தர்களே இருக்கமாட்டார்கள். உனக்கு கோயில்களும் இருக்காது. தாழம்பூ உன்னை இனி யாரும் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள் என்று இருவருக்கும் சாபமிட்டார். உண்மையை சொன்ன விஷ்ணு பகவனே, உனக்கு, எனக்கு நிகரான கோயில்கள் பூலோகத்தில் இருக்கும் என்று கூறி அவருக்கு ஆசியும் வழங்கினார். இந்த நிகழ்வு திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

சிவபெருமான் ஜோதி வடிவமாக விஸ்வரூபம் எடுத்த நிகழ்வே கார்த்திகைத் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை நடத்திய சிவபெருமான் லிங்கோத்பவர் என்று போற்றப்படுகிறார். பெரும்பாலும் மிகவும் பழமையான சிவன் கோயில்களில் மட்டுமே லிங்கோத்பவர் காணப்படுவார். புதிதாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் லிங்கோத்பவர் இருப்பது அரிதே.

சிவன் கோயிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்த பிறகு நமது வேண்டுதல் பலிக்க லிங்கோத்பவரிடம் அந்த வேண்டுதலை சொல்ல வேண்டுமாம். அப்படி சொல்வதன் மூலமாக விரைவில் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.