கிணற்று நீர் பிரசாதமாக கொடுக்கப்படும் வரசித்து விநாயகர் கோயில்!

64

கிணற்று நீர் பிரசாதமாக கொடுக்கப்படும் வரசித்து விநாயகர் கோயில்!

ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஊர் தான் காணிப்பாக்கம். இந்த ஊரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் வரசித்தி விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் இங்கு திருவிழா நடக்கிறது.

இந்தக் கோயிலில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சுயம்பு மூர்த்தியாக தோன்றிய கிணறு இந்தக் கோயிலில் காணப்படுகிறது. இந்தக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த பிரசாத நீரை குடித்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என்று இந்தக் கோயிலில் கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்தக் கோயிலில் உள்ள நாகர் சன்னதியில் வழிபட்டு சென்றால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

கொடுக்கல் வாங்கல் தகராறு, கணவன் மனைவி பிரச்சனை, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் என்று அனைவரும் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளை கூறுகின்றனர்.

இந்தக் கோயிலில் மிகவும் முக்கியமான நிகழ்வு எது என்று கேட்டால் அது சத்தியப்பிரமாணம் எடுக்கப்படும் நிகழ்ச்சி. பெண்களை ஏமாற்றியவர்கள், கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் என்று எந்தக் குற்றம் செய்தவராக இருந்தாலும், இந்தக் கோயிலில் சத்தியப்பிரமாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன்பு சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. இதில், பணம் வாங்கிவிட்டு வாங்கவில்லை என்று பொய் சத்தியம் செய்பவர்களாக இருந்தால் அவர்களை விநாயகப் பெருமான் சும்மாவே விடமாட்டார். அவர்களுக்கு விநாயகர் தக்க தண்டனை கொடுப்பார் என்பது நம்பிக்கை. ஆந்திரா மக்களுக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தலைமை நீதிபதியாக திகழ்கிறார்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத மற்றும் பார்க்க முடியாத 3 சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். மூவரும் விவசாயம் செய்து வந்தனர். ஆனால், மாற்றுத்திறனாளிகள் என்பதால் மூவராலும் இணைந்து தொழில் செய்ய முடியவில்லை. வாய் பேச முடியாதவன் சைகை மூலமாக உரம் போடு என்றால் காது கேட்காதவன் களை பறிக்க சென்று விடுவான்.

ஒரு முறை 3 சகோதரர்களும் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தனர். எப்படியோ கிணற்றில் தண்ணீர் வற்றிப் போக, கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஒரு இடத்தில் ரத்தம் வந்தது. அதனை பார்த்தபோது யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அந்த சிலையை வெளியில் எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. அதன் பிறகு கிணற்றுக்குள் இருந்தபடியே யானை முக கடவுள் சிலைக்கு பல்லாயிரக்கணக்கான இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

அந்த இளநீர் அருகிலிருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்று பெயர் வந்தது. இறுதியாக கிணற்றுக்குள்ளேயே விநாயகருக்கு சன்னதி எழுப்பினர். நீண்ட காலகட்டத்திற்குப் பிறகு இப்போது உள்ள கோயில் கட்டப்பட்டது.