கிருஷ்ண ஜெயந்தி: கண்ணன் பிறந்த நாள்!

139

கிருஷ்ண ஜெயந்தி: கண்ணன் பிறந்த நாள்!

விஷ்ணுவின் 9ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாள் கிருஷ்ண ஜெயந்தியாக (கோகுலாஷ்டமி) கொண்டாடப்படுகிறது. தமிழர்களால் கண்ணன், கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

கிருஷ்ணர் (கிருஷ்ண ஜெயந்தி) அவதரித்த நாளில் அதான் கோகுலாஷ்டமி நாளில் உறியடி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. இந்த நாளில் உறியடித்து மக்கள் கிருஷ்ணரை வரவேற்கின்றனர்.

மோகன் என்றால் பெண்களை வசீகரிப்பவர் என்றும், கோவிந்தன் என்றால் பசுக்களை கண்டுபிடிப்பவன் என்றும், கோபாலன் என்றால் பசுக்களை பாதுகாப்பவன் என்றும் பொருள்படும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவரது படத்தை வைத்து திருப்பாதங்கள் வரைந்து நைவேத்தியங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.

எந்த நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது? எப்படி வழிபடுவது? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

கோகுலாஷ்டமி கொண்டாட வேண்டிய நேரம்:

காலண்டரின்படி, ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 11.57 மணி முதல் அஷ்டமி திதி தொடங்கி ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதாவது கிருஷ்ணர் ஜெயந்தியான இன்று நள்ளிரவு 1.57 வரையில் அஷ்டமி திதி நீடிக்கிறது. ஆகையால், ஆகஸ்ட் 30 ஆம் தேதியான இன்று நல்ல நேர, கௌரி நல்ல நேரத்தில் பூஜையை தொடங்கலாம். அந்த வகையில், இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் தான் கௌரி நல்ல நேரம். அந்த நேரத்தில் கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம்.

கோகுலாஷ்டமி யாரெல்லாம் கொண்டாடலாம்?

தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் விஷ்ணு பகவான் எடுத்த 10 அவதாரங்களில் முக்கியமானவை ராம அவதாரம் மற்றும் கிருஷ்ண அவதாரம். இந்த இரண்டுமே தர்மத்தை நிலைநாட்டவே நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எப்போதும் நேர்வழியில் நடப்பவர்கள், எல்லா செல்வங்களும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், மழலைச் செல்வம் வேண்டும் என்று எண்ணுவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

கோகுலாஷ்டமி விரதம்:

கிருஷணர் பிறந்த நாளான இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து காலை முதல் மாலை வரை உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம், ஜூஸ் இந்த மாதிரி எடுத்துக் கொள்ளலாம். அதாவது, அரிசியைத் தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

கோகுலாஷ்டமியில் நைவேத்தியம் படைப்பது:

கண்ணன் பிறந்தநாளான இன்று அவருக்கு பிடித்தமான அப்பம், தட்டை, பால் திரட்டு, வெண்ணெய், நாட்டு சர்க்கரை, அவல், லட்டு, முறுக்கு, சீடை, விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு. எதுவுமே செய்ய முடியாதவர்கள், அவல் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டை மட்டுமே வைத்து வழிபட்டால் கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கோகுலாஷ்டமி வழிபடும் முறை:

கிருஷ்ணர் பிறந்த நாளான இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் உள்ள கௌரி நல்ல நேரத்தில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கிருஷ்ணரின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றைக் கொண்டு வழிபட வேண்டும். மேலும், கிருஷ்ணருக்கு முன்பாக ஒரு வாழை இலையில் பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மீது தண்ணீர் நிரம்பிய செம்பு கலசம் வைக்க வேண்டும். கலசத்தின் மீது மாவிளை வைத்து அதன் மீது தேங்காயை கலசம் போல் வைக்க வேண்டும். கலசத்திற்கு அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு குங்குமம் வைக்க வேண்டும். கிருஷ்ணருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை இலையில் படைத்து வழிபாடு செய்யலாம்.

கிருஷ்ணரின் பாதம்:

கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை உங்களது வலது கை உள்ளங்கையை மடித்து பக்கவாட்டு பகுதியை நாமத்தில் நனைத்து கீழே வைத்து பதித்தால் அழகான விரல்களை பாதச்சுவடுகளாக பெறலாம். எப்பொழுதும் வீட்டின் வாசல் படியிலிருந்து பூஜையறை வரையில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் செல்ல வேண்டும். இந்த பாதசுவடுகள் வழியாக கிருஷ்ண பகவானே நமது வீடுகளுக்கு வருவார் என்பது நம்பிக்கை.

ஏழை குழந்தைகளுக்கு தானம்:

ஏழை குழந்தைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கிருஷ்ணரை வழிபடும் போது நோட்டு, புத்தகம் ஆகியவற்றையும் வாங்கி பூஜையறையில் வைத்து, நெய் தீபம் ஏற்றி பிள்ளையாரை வணங்கிவிட்டு, கிருஷ்ணருக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்களை சொல்லியவாறு வழிபட வேண்டும்.

கிருஷ்ணரின் முக்கியமான மந்திரங்கள்:

கிருஷ்ணர் ஸ்தோத்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால், அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.

கிருஷ்ணர் மந்திரம்:

ஓம் ஸ்ரீம் நம: ஸ்ரீ கிருஷ்ண

பரிபூர்ணத்மயே ஸ்வாஹா:

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்:

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்:

கிருஷ்ணர் ஸ்லோகம்:

ஓம் நமோ விஸ்வரூபாய

விஸ்வ சித்யந்த ஹேதவே

விஸ்வேஸ்வராய விஸ்வாய

கோவிந்தாய நமோ நமஹ

நமோ விக்ஞான ரூபாய

பரமானந்த ரூபிணே

கிருஷ்ணாய கோவிந்தாய

கோவிந்தாய நமோ நமஹ:

குழந்தை வரம் – சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய

கோவிந்தாய கோபி ஜனவல்லபாய

சந்தான பாக்கியம் தேஹிமே ஸ்வாஹா:

கணவன் மனைவி இருவரும் கையில் வெண்ணெய் வைத்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் கிருஷ்ணரே மகனாக பிறப்பார் என்பது ஐதீகம்.

பூஜையை எப்படி நிறைவு செய்வது?

கலசத்தை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்து எல்லாவற்றையும் கலைத்துக் கொள்ளலாம். கிருஷ்ணருக்காக படைக்கப்பட்ட நைவேத்திய பலகாரங்களை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்துவிடலாம். நீங்களும் பிரசாதமாக பகிரலாம். நோட்டு, புத்தகங்களை ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம். பூஜையை முடித்த பிறகு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் பிறந்த கதை, கிருஷ்ணனின் லீலைகள் ஆகியவற்றை சொல்லித் தர வேண்டும். அதன் மூலமாக குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களே அதிகரிக்கும். இறைவன் மீது நம்பிக்கை மேம்படும்.

ஜென்மாஷ்டமி:

கிருஷ்ணர் பிறக்கும் போது தாய் தேவகி தந்தை வாசுதேவர் ஆகியோருடன் சந்திரன் மட்டுமே இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜென்மாஷ்டமி (ஜன்மாஷ்டமி) நாளில் சந்திர தரிசனம் செய்வது அனைத்து நன்மைகளையும் பெற்றுத் தரும். எப்போதும் நமது உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.