கெர்போட்ட ஆரம்பம் என்றால் என்ன? ஏன் அப்படி சொல்கிறார்கள்?
காலண்டரில் தேதி கிழிக்கும் போது கெர்போட்ட ஆரம்பம் என்று இருப்பதை பார்த்திருக்கலாம். சிலர், அரசு விடுமுறை நாட்களை பார்க்கும் போது கெர்போட்ட நிவர்த்தி என்று இருப்பதை பார்த்திருக்கலாம். உண்மையில், இது தமிழர்களின் அடுத்த ஆண்டுக்கான மழை கணிப்பு முறை ஆகும். கரு ஓட்டம், என்பதே, கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றானது. நாளடைவில் கெர்ப்போட்டம் என்றானது. தமிழகத்தில் சூரிய பகவானின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது. இது தவிர, வானியல் நட்சத்திரங்களை 27 மண்டலங்களாகவும், 12 ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.
தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது, பூராட நட்சத்திரத்தைக் கடக்க 14 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகர்வதை காணலாம். இந்த 14 நாட்களும் கர்ப்போட்ட நாட்களாகும். மழை கரு கொள்ளும் நாள் அல்லதும் ஏகம் சூலாகும் நாள். இதனை பெண்ணின் 10 மாத கர்ப்ப காலத்துடன் ஒப்பிடுங்கள். மார்கழியில் கர்ப்பம் தரிசிக்கும் பெண் ஒருவள், 9 மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.
அந்த வகையில் இந்த கர்ப்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், 9 மாதத்திற்கு பிறகு அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும். இந்த கர்ப்போட்ட நாட்கள் தோராயமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை அமைகிறது. மார்கழி மாதம் அமாவாசை முடிந்து, ஒரு வாரத்தில் தொடங்கி அடுத்து வரும் 14 நாட்கள் கர்போட்ட நாட்கள் என்று நினைவில் கொள்வார்கள். இந்த நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால், மேகம் நன்றாக கரு கட்டி இருக்கிறது என்று அர்த்தம். ஆகையால் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இதுவே, கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ அல்லது கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்துவிட்டது என்று பொருள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால், அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என்று அர்த்தம். இந்த கர்போட்ட நாட்களை கணித்து தான் விவசாயிகள் பயிர் செய்கிறார்கள்.