கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு!

103

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு!

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி தலங்கலிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அந்த வருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

திருவேற்காடு மாரியம்மன், திருமயிலை முண்டக கண்ணியம்மன், நார்த்தாமலை, சமயபுரம் மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். கன்னியாக்குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்படும்.

மகாலட்சுமி வழிபாடு: ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, அகிலாண்டேஸ்வரி, ஆதிபராசக்தி தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் “நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும். ஆடி வெள்ளியில் “சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு:

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது ஐதீகம்.

எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும்.

இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.

இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

ஆடி கடைசி வெள்ளியன்று அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோலமிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம். பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும்.

குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி யாகும். அன்றாட வாழ்க்கையின் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ? இன்றோடு துயர்விலக, இனிய தனலட்சுமியே! மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்! என்று பாடுங்கள்.

லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.

சந்திரனும் சுக்கிரனும் ஆதிக்கம் செலுத்தும் மாதம் ஆடி மாதம். தந்தையை குறிக்கும் சூரியன் தாயிடம் சென்று சரணடைகிறார். அதற்கு முன்பே கணவனை குறிக்கும் செவ்வாய் நீச வீடான கடகத்தில் பலம் இழந்துவிட்டது. ஆகவே ஆண்கள் தங்கள் வரட்டு கௌரவத்திற்க்காக சண்டை போடாமல் “மாத்ரு தேவோ பவ:” என சரணடைந்து விடுவது நல்லது.

பெண்கள் தங்களிடம் தஞ்சமடைந்தவர்களை எப்படியாவது காப்பாற்றி கரை சேர்க்கும் அற்புத மாதம் ஆகும். “ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் அதில் நான் எந்த மூலை” என்பதை உணர்ந்து மனைவியரின் கோபத்திற்கு முன் பணிந்து சென்றுவிடுவது நல்லது.

தேவர்களின் இரவு பொழுதான தக்ஷிணாயனத்தில் தெய்வீக வழிபாடுகள் செய்ய ஏற்ற நேரமாகும். பண்டிகை நிறைந்த ஆடி மாதத்தில் வழிபாடுகளும் தான தர்மங்களும் செய்ய சிறந்த மாதமாகும்.