கோயிலில் தேங்காய் உடைக்க காரணம் என்ன?

113

கோயிலில் தேங்காய் உடைக்க காரணம் என்ன?

எப்போதும் இறைவனை வழிபட பூவும், நீரும் போதும் என்று கூறுவதுண்டு. ஆனால், இந்து சமயத்தின் பூஜையின் போது தேங்காய் உடைக்க சில காரணங்களும் உள்ளன. அது என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்…

சிவன் படைத்த தேங்காய்:

விநாயகர் தனது தந்தையான சிவபெருமானிடம் உனது தலையை எனக்கு பலி கொடு என்று கேட்டாராம். இதன் காரணமாக தனது அம்சமாக 3 கண்களைக் கொண்ட தேங்காயை சிவபெருமான் படைத்துள்ளார் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களது வேண்டுதல் நிறைவேறவே பக்தர்கள் சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

முக்கண் தேங்காய்:

சிவன் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு 3 கண்கள் இருப்பதைப் போன்று தேங்காய்க்கும் 3 கண்கள் இருப்பது முக்கியமான சிறப்பம்சம்.

தேங்காயை உடைப்பதன் பலன்:

பழங்காலம் முதலே கோயில்களில் தேங்காய் உடைப்பது ஒரு வழிபாட்டு முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, முதலில் தேங்காயை வணங்கி, அதனை தீபத்தில் காட்டி உடைத்த பிறகு அதிலுள்ள குடுமியை எடுத்து, எந்தக் குற்றமும் அதில் இல்லை என்பதை உணர்ந்து தேங்காயில் உள்ள பருப்பை மட்டும் இறைவனை தரிசிக்குமாறு வைத்து, அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டு வருவது முறை. தேங்காய் உடைக்கும் போது காய் அழுகியிருந்தால் அந்த தேங்காயை இறைவனுக்கு படைக்க கூடாது.

தேங்காய் உடைப்பதின் தத்துவம்:

இரு கண்களுடன் இருக்கும் மனிதர்கள், நன்கு பக்குவமடைந்த பின்னர், ஞானக் கண் எனும் அறிவுக்கண் பெறுகின்றனர். பக்குவம் நிலை தடுமாறினால், மனமும், தேங்காயும் அழுகிவிடும். பக்குவமுடைய மனதுடன் தான் இறைவனை வழிபட வேண்டும்.

தேங்காய் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் ஆகிய 3ம் மும்மலங்கள். iந்த இந்த மூன்றும் களைந்தவுடன் அகங்காரம் என்னும் ஓடு நொறுங்குகிறது. இதையடுத்து, வெண்மை பிரகாசிக்கிறது. தேங்காய் – இதயம். மூன்றாம் கண்கள் – ஞானக் கண், வெண்மை – சத்துவ குணம். சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், ஞானக் கண்ணால் இறைவனை தரிசிக்கும் போது வெளிப்படும் பக்தி உணர்வுகளைத் தான் இதயம் உணர்கிறது என்ற தத்துவத்தை தேங்காய் உணர்த்துகிறது.

எதிர்காலத்தை உணர்த்தும் தேங்காய்:

கோயிலில் உடைக்கப்படும் தேங்காய், பூஜையின் பயன், வாழ்வில் எதிர்கால நிகழ்வுகளை உணர்த்துகின்றன. அதனால், தான் கோயில்களிலும், வீடுகளிலும் பூஜையின் போதும், சுப நிகழ்ச்சிகளின் போதும் தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் உடைக்கப்படும் போது அது நன்றாக உடைய வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள்.

தேங்காய் உடைக்கும் போது அது ஒரே அடியாக இரு பகுதிகளாக உடைய வேண்டும். அப்படி உடைந்தால் மிகவும் நல்லது. உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருப்பதும், சரிபாதியாக உடைவதும் மிகவும் சிறப்பு. ஆனால், இரு துண்டுகளாக உடைக்கப்படும் தேங்காயில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தால் தவறு ஒன்றுமில்லை.

தேங்காய் தொட்டில் போன்று உடைந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தேங்காயின் குடுமிப் பகுதி மற்ற பகுதியை விட சற்று பெரிதாக உடைவது நல்லது. ஓடு மட்டும் தனியாக வந்து கொப்பையை போல் விழுந்தால் அதனை சரி பாதியாய் உடைத்து விடலாம். தேங்காய் தண்ணீரை டம்ளரிலோ அல்லது பாத்திரத்திலோ பிடித்து அதனை தீர்த்தமாக இறைவனுக்கு பயன்படுத்தலாம்.

தேங்காய் உடைக்கும் போது தவிர்க்க வேண்டியது:

தேங்காய் அழுகி இருக்கக் கூடாது. சிதறும் போது தூள் தூளாக உடைக்க கூடாது. தேங்காய் நீர் துர்நாற்றம் அடிப்பது குற்றம். தேங்காய் உடைக்கும் போது கை தவறி கீழே விழுவது அபசகுனம். தேங்காயை உடைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கலாம்.

சிதறு தேங்காய்:

  1. தூள் தூளாகும்படி தரையில் அடிப்பது சிதறு தேங்காய்.
  2. சிதறிய தேங்காய் பகுதிகளை எடுத்துக் கொள்ள கொள்ளை விடுவது என்பது சூறை தேங்காய்.
  3. 4 திசைகளிலும் தேங்காய் சிதறும்படி உடைப்பது சதுர் தேங்காய்.
  4. சூறை தேங்காய் போடுவது என்பது விநாயகருக்கு உரிய வழிபாடு.
  5. விநாயகரிடம் பிரார்த்தனை செய்து, நாம் நினைத்த காரியம் நிறைவேறிவிட்டால் சிலர் 108 தேங்காய்களை சூறை போடுவார்கள்.
  6. சிதறிய தேங்காய் துண்டுகளை எடுக்கும் உரிமை சிறுவர்களுக்கு மட்டுமே இருக்கு. குழந்தைப் பிள்ளையாரின் பிரசாதம் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தம்.

அர்ப்பணிப்பு உணர்வு:

எப்போதெல்லாம் நாம் சிதறு காய் போடுகிறோமோ அப்போதெல்லாம் அகங்காரம் நீங்கும். அதோடு தியாகமும் நிறைவேறும்.

சிதறுகாய் போட்ட தேங்காயை எத்தனையோ பேர் எடுத்துச் செல்கின்றனர். இது தர்மம் செய்ததற்கு சமமாகும்,

இளநீர்:

இளநீர் மருத்துவ குணமுடையது. இயற்கையில் வரப்பிரசாதம். இது அபிஷேகப் பொருட்களில் ஒன்று. பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய இளநீரும் பயன்படுத்தப்படும். இப்படியெல்லாம் சிறப்பு வாய்ந்த தேங்காய் கோயில்களில் பூஜை செய்யும் போது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.