சண்டிகேஸ்வரர் முன் கை தட்டலாமா?

100

சண்டிகேஸ்வரர் முன் கை தட்டலாமா?

அனைத்து சிவன் கோயில்களில் சண்டிகேஸ்வரருக்கு என்று தனியாக சன்னதி இருக்கும். அதுவும் சின்னதாக இருக்கும். விநாயகர், சிவன், துர்க்கையை வழிபட்டுவிட்டு அதன் பிறகு சண்டிகேஸ்வர்ரை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும் போது அவருக்கு முன் கை தட்டுவார்கள். உண்மையில் அப்படி கை தட்டலாமா கூடாதா என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

சண்டிகேஸ்வரர் கதை:

சேய்ஞலூர் என்ற கோயில் சோழ நாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் எச்சதத்தன் மற்றும் பவித்திரை தம்பதியினர் தங்களது மகன் விசாரசருமனுடம் வசித்து வந்தனர். பசு மேய்க்கும் வேலைசெய்து வந்தான் விசாரசருமன். மேலும், பசுக்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தான். இதே போன்று பசுக்களும் விசாரசருமன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தன.

பசுக்களை மேய்க்கச் செல்லும் போதெல்லாம் அங்கு மணலில் சிவலிங்கம் வடித்து தியானம் செய்து வழிபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். அப்போது, சிவலிங்கத்திற்கு பசுக்கள் தானாக பால் சுரந்து அபிஷேகம் செய்யும். மேலும், வீட்டிற்கு சென்றும் எஜமானுக்காகவும் பசுக்கள் பால் சுரக்கவும் செய்தன.

ஒரு நாள் விசாரசருமன் மணலில் சிவலிங்கம் செய்து தியாகம் செய்யும் போது வழக்கம் போல் பசுவானது பால் சுரந்து அபிஷேகம் செய்தததை அந்த ஊர் இளைஞன் ஒருவன் பார்த்து மாட்டின் உரிமையாளர் எச்சதத்தனிடம் சொல்லி மகனை எச்சரித்து வைக்குமாறு கூறினான்.

இதைத் தொடர்ந்து, விசாரசருமன் செய்வதை எச்சதத்தன் மறைந்திருந்து பார்த்தான். அப்போது பசுக்கள் தானாக பால் சுரந்து மணல் லிங்கம் மீது அபிஷேகம் செய்வதைப் பார்த்த எச்சதத்தனுக்கு பயங்கரமாக கோபம் வந்து மணல் லிங்கத்தை காலால் எட்டி உதைத்தார். ஆழ்ந்த தியானத்தில் இருந்து கண் திறந்து பார்த்த விசாரசருமன் எச்சதத்தன் காலால் மணல் லிங்கத்தை எட்டி உதைப்பதை பார்த்து ஆத்திரமடைந்து தனது கையிலிருந்த குச்சியை அவர் மீது வீசி எறிந்தான். அந்த குச்சியானது கோடாரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

வரம் அருளிய சிவபெருமான்:

விசாரசருமன் முன் தோன்றிய சிவன் பார்வதி, எச்சதத்தன் காலின் காயத்தை மறையும்படி அருளினார். அதோடு விசாரசருமனுக்கு சிவ கணங்களை (சண்டிகேச) நிர்வாகம் செய்யும் பதவியை கொடுத்தார். மேலும், தனக்கு சூட்டப்பட்டும் அனைத்து மாலைகளும், நைவேத்தியங்களும் சண்டிகேஸ்வரருக்கு சேரும் என்று அருளினார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சிவபெருமானுக்கு சூட்டப்படும் மாலைகளும், நைவேத்தியங்களும் சண்டிகேச பதவி செய்யும் விசாரசருமனுக்கு வழங்கப்படும் பழக்கம் இருந்து வருகிறது.

எப்போதும் சிவபெருமானை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கும் போது கை தட்டுவது என்பது பாவத்தைச் சேரும். சிவ கணங்களை (சொத்துக்களை) நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேஸ்வரரை, சிவ தரிசனம் செய்த பிறகு வணங்க வேண்டும். ஏனென்றால், கோயிலிலிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதற்கு அடையாளமாக இரு கைகளையும் துடைத்துவிட்டு காண்பிக்க வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் காண்பிக்கும் பழக்கம் இருந்தது. அதுவே நாளடைவில் கை தட்டும் பழக்கமாக மாறிவிட்டது.

உண்மையில், சிவபெருமானி வணங்கி வழிபட்ட பிறகே சண்டிகேஸ்வரரை வணங்கி வழிபட வேண்டும். அப்போது தான் சிவனின் முழு அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.