சனிப்பிரதோஷம்: கோடி புண்ணியம் சேர்க்கும் பிரதோஷ வழிபாடு!

183

சனிப்பிரதோஷம்: கோடி புண்ணியம் சேர்க்கும் பிரதோஷ வழிபாடு!

சனிப் பிரதோஷ நாளன்று நந்தி பகவானை வணங்கி வழிபட சனி பகவானால், உண்டாகும் அனைத்து தோஷங்களும் நீங்கும். அதே போன்று ஈசனை வழிபட ஐந்து வருடத்திற்கு சிவபெருமானை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். ஓமைக்ரான் தொற்று காரணமாக ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்தபடியே சிவபெருமானை நினைத்து வணங்கினால் கோடி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை வரும் பிரதோஷத்தன்று ஈசனை தரிசனம் செய்தால், சகல பாவங்களும் நீங்கி, புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும், இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். சனிப்பிரதோஷ நாளான இன்று செய்யப்படும் தானம் அளவற்ற நன்மையைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தி கொடுக்கும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய நாட்களில் வரும் திரையோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலத்தை பிரதோஷ காலம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். ஏகாதசி நாளின் போது ஆலகாலம் விஷம் உண்ட எம்பெருமான் சிவன், மறுநாள் துவாதசி நாள் முழுவதும் மயக்க நிலையிலிருந்தார்.

பின்னர், 3ஆவது நாளான திரையோதசி நாளின் போது பகல் மற்றும் இரவும் சந்திக்கும் வேளையில் மயக்க நிலையிலிருந்து விழித்தெழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழிலையும் ஊக்கப்படுத்தும் வீதமாக ஈசனால் ஆடப்பட்டது என்று கூறுகிறார்கள். இதைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் உள்பட அனைவரும் எம்பெருமானின் திருத்தாண்டவத்தை தரிசனம் செய்தார்கள்.

எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது. நந்தி பகவானின் கொம்புகளுக்கிடையில் சிவன் ஆடும் நேரம் பிரதோஷம் காலம். அப்போது நந்தி பகவானின் கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசனம் செய்வது சிறப்பு தரும். சிவபெருமான் உருவாக்கிய நான்மறைகளை முதன் முதலில் ந ந்தி பகவானுக்கு தான் உபதேசித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன

சிவபெருமான் உருவாக்கிய நான்மறைகளை முதன் முதலில் நந்தி பகவானுக்கு தான் உபதேசித்தார். அதனால், தான் பிரதோஷ காலத்தின் போது முதலில் நந்தி பகவானுக்கு தான் அபிஷேகமும், பூஜையும் செய்யப்படுகிறது. பிரதோஷ நாளான இன்று நமசிவாய மந்திரம் சொல்லி சிவனையும், நந்தி பகவானையும் வழிபாடு செய்வதன் மூலமாக ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். ஓமைக்ரான் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஆலயங்களில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில சிறிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சனிப்பிரதோஷ நாளில் ஆலயம் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வேண்டாம் வீட்டில் இருந்தபடியே பிரதோஷ நேரத்தில் சிவன், நந்தியை வணங்கி வழிபாடு செய்தால் கோடி புண்ணியம் வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.