சம்மணக்கால் போட்டு சாப்பிடுவது ஏன் தெரியுமா?

116

சம்மணம் போட்டு சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா?

எப்போது டைனிங் டேபிள் வீட்டிற்குள் வந்ததோ அப்போதே நமது கலாச்சாரம், பாரம்பரியம் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நமது முன்னோர்கள் எப்போதும் சம்மணக்கால் போட்டுத்தான் சாப்பிட்டு வந்தார்கள். இவ்வளவு ஏன், நமது பெற்றோர்களும் அப்படியே அதே முறையைத் தான் இப்பொழுதும் பின்பற்றி வருகிறார்கள்.

கூட்டாஞ்ச்சோறு சாப்பிடும் போதும் சரி, நிலாச்சோறு சாப்பிடும் போதும் சரி சம்மணக்கால் போட்டு தான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் போதும் சரி, விருந்தினர்கலை அதில் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறும் போதும் சரி நமது பாரம்பரிய பழக்கம் மறைந்துவிட்டது. மாறாக நாகரீகமானது சௌகரியமாகிவிட்டது.

சரி, ஏன் முன்னோர்கள் இப்படி சம்மணங்கால் போட்டு சாப்பிட்டு வந்தார்கள்? அதற்கு என்ன நோக்கம்? என்று பார்ப்போம்…. சாப்பிடும் பொழுது காலை கீழே தொங்கப்போட்டு அமரும் போது ரத்த ஓட்டமானது காலுக்கே அதிகளவில் செல்கிறது. இதனால், வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்வதில்லை. இதன் விளைவாக அஜீரணக் கோளாறு ஏற்படும் நிலை உருவானது.

ஆனால், காலை மடக்கி ஆசனம் செய்வது போன்று அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட சாப்பிட உடனடியாக ஜீரணமாகிவிடும். காலை மடக்கி சம்மணம் போட்டு உட்காரும் போது ரத்த ஓட்டமானது வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. இதனால், ஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தான், சாப்பிடும் போது சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினர்.

இதையெல்லாம் மறந்து, டைனிங் டேபிளில் நாம் சாப்பிடுவது மட்டுமின்றி நமது பிள்ளைகளையும் டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பிட சொல்கிறோம். அப்புறம் என்ன, அஜீரணக் கோளாறு ஏற்படும். அதற்காக நடையோ நடையோ என்று நடை பயிற்சி செய்கிறோம். மருத்துவமனைக்கு செல்கிறோம். இனிமேலாவது அனைவரும் தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவோம்.