சரஸ்வதி பூஜை கொண்டாட வழிமுறைகள் என்ன?

112

சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதற்கான வழிமுறைகள் என்ன?

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி வரும் 14 மற்றும் 15ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் குறிக்கிறது. சரஸ்வதியானவள், அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் ரூபமாக கருதப்படுகிறாள்.

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், சிறந்த அறிவாற்றலுடனும், புத்திச்சாலியாகவும் திகழ சரஸ்வதி தேவி அருள் புரிகிறாள். படைக்கும் தொழில் புரியும் பிரம்மாவின் மனைவி தான் சரஸ்வதி தேவி. நவராத்திரியின் கடைசி நாளில் அம்மன், மகா சரஸ்வதியாக வெளிப்படுவார் என்று நம்ப ப்படுகிறது. இந்த ஆண்டு 14 ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜையின் போது சரஸ்வதி சிலை அல்லது படத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிறமே உகந்தது. வெண்ணிற அன்னப்பறவை தான் இவளது வாகனம். வெண்ணிற தாமரை மலரில் அமர்ந்து கையில் வீணையோடு பார்ப்பதற்கு சாந்தமாக காட்சி தருவாள். கலைகளுக்கு எல்லாம் அரசி. கலைவாணி என்றும் அழைக்கப்படுகிறாள். இவளை வணங்குவதற்கு வெள்ளை நிற பொருட்களைக் கொண்டு வழிபடுவதே சிறந்தது.

சரஸ்வதி தேவிக்குரிய கடைசி 3 நாட்களும் வெள்ளை நிற மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை, வெள்ளை நிற பூக்கள், வெள்ளை நிற ரங்கோலி, வெள்ளை எள், பழங்கல், பொரி, அரிசி மற்றும் தேங்காயுடன் படைக்கப்பட்ட நைவேத்தியம் ஆகியவை கொண்டு பூஜை செய்யப்படுகிறது. வெள்ளை அல்லி சரஸ்வதி தேவிக்குரிய மலர் என்று நம்பப்படுகிறது. இந்த 3 நாட்களும் மாணவர்கள் தங்களது புத்தகம், எழுதுவதற்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை சரஸ்வதி தேவியின் பட த்திற்கு முன்பாக வைத்து வழிபடுகின்றனர். இன்னும் சிலர், சரஸ்வதி தேவிக்கு முன்பாக அ என்று எழுத தொடங்கி அவளது அருள் பெறுவர்.

சரஸ்வதி பூஜை நேரம்:

அக்டோபர் 13: சரஸ்வதி தேவியை அழைத்தல் (ஆவாஹனம்).

அக்டோபர் 14: நவமி திதி, உத்திராடம் நட்சத்திரம். காலை நல்ல நேரம், 10.45 மணி முதல் 11.45 மணி வரை. சரஸ்வதி தேவியை வழிபடுதல்

அக்டோபர் 15: சரஸ்வதி விசர்ஜனத்தைக் (கரைத்தல்) காண்பர்.