சிவன் சொன்னதற்காக மயானமே இல்லாத ஒரு ஊரா?

56

சிவன் சொன்னதற்காக மயானமே இல்லாத ஒரு ஊரா?

திரு ஆனைக்கா (திருவானைக்காவல்), திருக்கோலக்கா (சீர்காழியில்), திருநெல்லிகா (திருத்துறைப்பூண்டி), திருக்குறக்குக்கா (நீடூர் அருகில்), திருக்கோடிக்கா எனும் ஐந்து இடங்களிலிருக்கும் சிவத்தலங்களைப் “பஞ்ச காக்கள்” என்கின்றனர். “கா” என்றால் சோலை என்று பொருள். எனவே சோலைகளுக்கு நடுவில் அமைந்த ஊர் எனப் பொருள் கொள்ளலாம்.

திரிகோடி என்றால் மூன்று கோடி என்று பொருள். மூன்று கோடி மந்திர தேவதைகள் சிவ வழிபாடு செய்து, சாபம் நீங்கி ஞானமுக்தி பெற்ற தலம் என்பதால் இது திருகோடிக்கா என்று அழைக்கப்பட்டுத் தற்போது திருக்கோடிக்காவல் என மருவியிருக்கிறது.

இங்குள்ள இறைவன் கோடீஸ்வரர், வேத்ரவனேஸ்வரர், கோடிக்காநாதர் எனும் பெயர்களில் அழைக்கப்படுகிறார். கோடீஸ்வரர் என்றால் பெரும் பணம் படைத்தவர் என்ற பொருள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், இங்கு அப்படி பொருள் கொள்ளக்கூடாது. கோடி ஈஸ்வரனைப் பார்ப்பதும், திருக்கோடிக்காவில் இருக்கும் ஒரு ஈஸ்வரனைப் பார்ப்பதும் சமம் என்கின்றனர்.

காசியைப் போல் திருக்கோடிக்கா தலத்தில் வாழ்பவர்களுக்கும் எம பயம் கிடையாது என்கின்றனர். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. கணவனைக் கொன்று நெறி தவறித் தனது வாழ்க்கையை நடத்தி வந்த லோகா காந்தா எனும் பெண் ஒருவர், தனது இறுதிக் காலத்தில் திருக்கோடிக்காவில் வந்து தங்க நேர்ந்தது.

அவள் மரணமடைந்ததும், எமன் அவளைத் தண்டிப்பதற்காக நரகலோகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவ தூதர்கள் அவளைத் தங்களுடன் அனுப்பி வைக்கும்படி வேண்டினர். அதற்கு மறுப்பு தெரிவித்த எமன் இறைவன் சிவபெருமானைச் சந்தித்து அது குறித்து முறையிட்டார். அப்போது சிவபெருமான் எமனிடம், “எனது தலமான திருக்கோடிக்காவில் வாழ்ந்தவர்களையோ, திருக்கோடிக்காவிற்கு வந்து வழிபட்டுச் சென்றவர்களையோ தண்டிக்கக் கூடாது” என்று அறிவுறுத்தி அனுப்பினார்.

எமனும் வேறு வழியின்றி லோகாகாந்தாவைச் சிவதூதர்களுடன் அனுப்பி வைத்து விட்டுத் திரும்பிச் சென்றான். இதை உறுதிப்படுத்தும் விதமாகத் திருக்கோடிக்காவில் இன்றும் மயானம் இல்லை. இங்கு இறப்பவர்களைக் காவிரியின் அடுத்த கரைக்கு எடுத்துச் சென்றுதான் இறுதிச் சடங்குகள் செய்கின்றனர்.