சிவபெருமான் உருவம் உணர்த்துவம் தத்துவம் என்ன?

127

சிவபெருமான் உருவம் உணர்த்துவம் தத்துவம் என்ன?

சிவனின் உருவ விளக்கம்:

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். சிவபெருமானுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும், இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும், உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அவற்றை அழித்துத் தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சிவனின் உருவ தோற்றத்தில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளது. அதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்…

நடராஜர் வடிவம்:

நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்னி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதாகும்.

தட்சிணாமூர்த்தி திருக்கோலம்:

வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈஸ்வரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரியவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முன்னால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள் சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.

மானின் தத்துவம்:

மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான் தாமே வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.

பாம்பு புலித்தோல் தத்துவங்கள்:

சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு, நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில் தள்ள சந்தர்பம் பார்த்தபடி நச்சுப் பாம்பாக நம்மைச் சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித்தோல் நம்மனம் மிருக உணர்ச்சிக்கு இணங்கக்கூடாது, உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.

பிறை உணர்த்தும் தத்துவம்:

சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.

கங்கை உணர்த்துகின்ற தத்துவம்:

ஜடாமுடியில் இருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையான உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.

பஞ்சாட்சர மந்திர தத்துவம்:

சைவ சமயத்துகே உரித்தான பதி, பசு, பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும். நமசிவாய என்பதில் நம-பசுவையும், சி-பதியையும், வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

ரிஷப வாகனத் தத்துவம்:

தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டார். தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷப வாகனம் உணர்த்துகின்றது.