சிவபெருமான், ஸ்ரீ ராமன் – இவர்களில் யார் உயர்ந்தவர்?

208

சிவபெருமான், ஸ்ரீ ராமன் – இவர்களில் யார் உயர்ந்தவர்?

இராமாயணத்தில் சிவனும், ராமனும் எதிரெதிரே நின்று போர் புரிந்த கதை உண்டு. ராவணன் வதம் புரிந்து நாடு திருமிய ராமன் அயோத்தியை ஆண்டு வந்த காலம் தான் அது. சான்றோர் அறிஞர்களின் அறிவுரைப்படி ராமன் ராஜசூய யாகம் நடத்தினார். அதன்படி, பட்டாடை சூட்டப்பட்ட ராஜ குடையை ஏந்திய குதிரை செல்லும் இடமெல்லாம் ராஜசூய யாகம் நடத்தும் மன்னருக்கு சொந்தமானது.

ராஜ குதிரை சென்ற நாடுகளை போர் புரிந்து மன்னனின் படைகள் கைப்பற்றிக் கொள்ளலாம். இப்படி இராமனின் குதிரை சென்ற நாடுகளை எல்லாம் இராமனின் படைகள் கைப்பற்றி வந்தன. இந்நிலையில் அந்த குதிரை ஒரு நாட்டை சென்றடைந்தது அந்த நாட்டின் அரசன் ஒரு உண்மையான சிவபக்தன். சிவபெருமானே “உனக்கும் உன் நாட்டிற்கும் ஆபத்து வந்தால் நான் பாதுகாப்பேன்” என்று சிவபெருமானே அந்த மன்னனுக்கு ஏற்கனவே ஒரு வரத்தினை கொடுத்திருந்தார்.

அந்த சிவபக்தனின் நாட்டில் அந்த குதிரை வந்து நிற்க, ராமனின் படைகள் அந்த நாட்டை சூழ்ந்தன. சிவபக்தனான மன்னன் உடனே சிவபெருமானை மனமுருகி வேண்டிக் கொள்ள, சிவபெருமானும் அந்த மன்னனை காக்க தனது பூதப்படைகளை அனுப்பி வைத்தார். அப்போது நடந்த போரில் ராமனின் படைகள் தோற்றன.

இதையறிந்த ராமன், தனது படைகளை காக்கவே தனது தம்பிகளையும், படைத்தளபதிகளையும் அனுப்பி வைத்தார். ராமனின் தம்பிகளின் அஸ்திரத்திரங்களால் சிவபெருமானின் பூதப்படைகள் தோல்வியை தழுவின. இதையடுத்து, உடனே சிவபெருமான் வீரபாகு வீரபத்திரன் மற்றும் நந்தியை அனுப்பி வைத்தார்.

நந்தி, வீரபாகு, வீரபத்திரனின் மந்திர சக்திகளை எதிர்கொள்ள முடியாமல் ராமனின் தம்பிகள் தோற்க, அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராமன் லட்சுமணன், அனுமன் போன்றோர் போர்க்களம் புகுந்தனர். இராம லட்சுமணனின் திவ்ய அஸ்திர வித்தையில் நந்தியும், வீரபத்திரனும் சிவபெருமானின் ஆயுதப் படைகளும் தோற்க அவர்களைக் காக்க கடைசியில் சிவபெருமானே போர்க்களத்தில் தோன்றினார்.

சிவபெருமானை கண்டதும் ராமன் தன் அஸ்திரத்தை உடனே துறந்து  சிவபெருமானை வணங்கி நின்றார். சிவபெருமான் ராமனை தன்னுடன் போர் புரிய கூறினார். ஆனால், ராமனோ மறுத்தார். சிவபெருமான், ராமனிடம் இதோ இந்த மன்னன் எனது பரமபக்தன். இவனை காப்பதாக நான் வாக்களித்து இருக்கிறேன். அதோடு, உன் அஸ்திர வித்தைகளையும் பார்க்க நான் ஆவலாக உள்ளேன். எனவே நீ போர் புரிந்து தான் ஆக வேண்டும் என்று சிவபெருமான் ஆணையிட்டார்.

அதன்படி இராமனும் தன்னிடமிருந்த திவ்ய அஸ்திரங்களை சிவபெருமான் மீது ஏவினார் அந்த அஸ்திரங்கள் ஒன்றும் சிவபெருமானை எதுவும் செய்யவில்லை. இராமனின் எந்த அஸ்திரத்துக்கும் சிவபெருமானின் மனம் குளிரவில்லை. தன்னிடம் இருந்த அனைத்து அஸ்திரங்களையும் உபயோகித்த பின் கடைசியாக சிவபெருமானே தனக்கு வரமாய் தந்த பாசுபதாஸ்தரத்தை சிவபெருமான் மீது செலுத்தினார் இராமன்.

எந்த சக்தியாலும் அந்த அஸ்திரத்தை தடுக்க முடியாது என்பது அந்த அஸ்திரத்தின் சிறப்பு. சிவபெருமான் அந்த பாசுபதாஸ்திரத்தை ஏற்றுக் கொண்டு மனநிறைவு அடைந்தார். போர் முடிவுற்றது. சிவபெருமான் அந்த மன்னரையும், ராஜ்ஜியத்தையும் ஒன்றும் செய்யாதிருக்க இராமனிடம் அறிவுறுத்தினார். இராமனும் அந்த ராஜ்ஜியத்தை அந்த அரசனுக்கே வழங்கினார்.

இப்படி சிவபெருமான் ராமனிடம் கொண்ட பேரன்பால் அவரின் அஸ்திர வித்தைகளை காண ராமனிடம் நேராக போர் புரிந்தார். மகனிடம் தகப்பன் நடந்து கொள்வது போல் ராமனிடம் நடந்து கொண்டார். ஸ்ரீ இராமன் மனிதரில் பெரியவர். சிவனோ பிரபஞ்சத்தில் பெரியவர்.