சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

33

சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும்.

ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கி விடும். வெள்ளிக்கிழமை சுக்கிரவார தினத்தில் வரும் பிரதோஷ நாளில் சிவன் நந்தியை தரிசனம் செய்தால் கடன் பிரச்சினைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும். சர்ப்பதோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.

சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கள் கிழமையில் வரும் பிரதோஷம் போல், சனிக்கிழமையில் வரும் மகா பிரதோஷம் போல், சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினைகள் தீரும். நிதி நெருக்கடி நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கி விடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம். ஜோதிடத்தில் 6 ஆம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது.

கால புருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி ராசி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.

ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று 2ஆம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி 12 ஆம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது.

லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக 6 ஆம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார்.

ஆனால் லக்னாதிப தி பலமற்ற நிலையில் 6 ஆம் பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டபடுவர்.

ஜாதகப்படி லக்னாதிபதி 6 ஆம் இடத்தில் பகை பெற்றோ தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை அல்லது புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு, வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும். அவரது வாழ்கையில் போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். கடன் பிரச்சினை தீர ருண விமோசன பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்வது போல சுக்கிரவார பிரதோஷ நாளிலும் சிவ தரிசனம் செய்யலாம்.

பிரதோஷ நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவபெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். நாளைய தினம் 16 வகையான பொருட்களால் கண்கள் குளிர, நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். நந்தி, சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே விஷேசமானது.