செல்வம் வரும் 3 முக்கியமான வழிகள்!

140

செல்வம் வரும் 3 முக்கியமான வழிகள்!

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. செல்வத்தை பாதுகாப்பவர் குபேரர். லட்சுமி மற்றும் குபேரர் ஆகிய இருவரையும் ஒன்றாக வழிபட்டு வர நமக்கு பணப்பிரச்சனையே வராது. இழந்த செல்வத்தையும் திரும்ப பெற்றுத் தருவதில் லட்சுமி குபேரர் முக்கியமானவர். கோடி கோடியாய் கொட்டும் திருப்பதியில், பெருமாளே பத்மாவதியை திருமணம் செய்ய பொருள் இல்லாமல் குபேரனிடம் கடன் பெற்றார் என்பது புராணம்.

செல்வம் என்னென்ன வழிகளில் வரும்? எப்படி வரும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

செல்வம் 3 வழிகளில் வரும்

  1. லட்சுமி செல்வம்
  2. குபேர செல்வம்
  3. இந்திர செல்வம்

இந்த 3 வழிகளில் தான் செல்வம் பெருகுகிறது. சரி, ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில்,

லட்சுமி செல்வம்:

அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய முக்கோடி தேவர்களும், தேவர்களுக்கு எல்லாம் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். இதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவனின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும், தேவர்கள் மட்டும் போதாது என்று அரக்கர்களும் தங்களது பங்கிற்கு உதவி செய்தனர். அதன்படி, அரக்கர்கள் ஒருபுறமும், தேவர்கள் ஒருபுறம் என்று பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். தன்வந்திரி, காமதேனு, ஐராவதம் (யானை), சந்திரன் இவர்களுடன் மகாலட்சுமி தேவியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமி தான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்து அருளினாள்.

அதோடு குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாகவும் ஆக்கினாள். குசேலனுக்கு நிதியை வாரி வாரி கொடுத்தாள். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும் என்பதி நியதி.

பொதுவாக கொடை வள்ளல் குணம் கொண்டவர்களின் மீது தான் லட்சுமி தேவியின் கடைக்கண் பார்வை இருக்கும். லட்சுமி தேவியின் செல்வத்தைப் பெற்றவர்களுக்கு புத்தி கெட்டுப் போகாது. லட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு மற்றவர்களின் மனதை புண்படுத்தமாட்டார்கள். இந்த செல்வம் ஏழு தலைமுறையையும் தாண்டி வற்றாத கடல் போன்று எப்போதும் நிலைத்து நிற்கும்.

குபேர செல்வம்:

விஸ்வரன் முனிவருக்கும், அரச குலத்தைச் சேர்ந்த ரிஷி குமாரிக்கும் மகனாகப் பிறந்தவர் குபேரன். இவருக்கு, ராவணன், கும்பகர்ணன், விபீஷ்ணன் என்று ஒன்னுவிட்ட சகோதரர்களும், சூர்ப்பனகை என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். குபேரனுக்கு சித்திரலேகா என்ற மனைவியும், நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.

ராவணனால், குபேரனின் நகரம் முழுவதும் கைப்பற்றுப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். தவம் செய்து, தனது தவத்தின் பலனாக, பத்மினி, பத்மம், மஹாபத்மம், குமுதம், சங்கமம், நீலம், கச்சபதம், மகரம், நந்தம் ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை மனமுருகி வழிபாடு செய்வதோடு, குபேரனுக்குரிய மந்திரத்தை தினமும் பூஜையறையில் அமர்ந்து சொல்ல வேண்டும். அப்படி சொல்லி வர, திடீர் செல்வம் வந்து சேரும். ஆனால், அது எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாத வகையில் இருக்கும். திடீரென இந்த செல்வம் எப்படி வந்ததோ, அதே போன்று திடீரென்று மறைந்துவிடவும் செய்யும்.

ஆகையால், செல்வம் மறைந்துவிடாமல் இருக்க, அன்னதானம் செய்தல், படிக்கும் குழந்தைகளுக்கு உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற காரியங்களுக்கு செலவு செய்தால், உங்களுக்கு வந்த செல்வம் அப்படியே இருக்கும்.

இந்திர செல்வம்:

இந்திரனுக்கு போகி என்ற பெயர் உண்டு. வருண பகவானுக்கு அரசன் இந்திரன். மழை பெய்தால் தான் பயிர்கள் செழிக்கும், உயிர்கள் வாழும். ஆதலால், தான் வருண பகவானுக்கு அதிபதியான இந்திரனை போகி என்று பூஜிக்கும் பழக்கம் இருந்தது. தற்போது, பழையன கழிதல், புதியன புகுதல் என்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி, இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், பசு, அரச போக ராஜ வாழ்க்கை, வீடு, பொன் பொருள் சேர்க்கை என்று அனைத்துமே இந்திரனின் அடையாளங்கள். இந்திரன் அருளால் கிடைக்கும் செல்வம் 3 தலைமுறைகள் வரையிலும் வராது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும். அது போன்று ஒரு சிலருக்கு அந்த செல்வம் ஒரே தலைமுறையில் கூட மறைந்துவிடும்.

காலங்காலமாக இந்த செல்வம் நிலைக்க வேண்டுமென்றால், கிரிவலம் சென்று வருதல், குல தெய்வ தரிசனம், இயலாதவர்களுக்கு உதவி செய்தல் போன்றவை நல்ல பலன் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.