தனக்கு என்ன அலங்காரம் வேண்டுமென்று கேட்கும் முருகனின் அதிசய கோயில்!

283

தனக்கு என்ன அலங்காரம் வேண்டுமென்று கேட்கும் முருகனின் அதிசய கோயில்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் என்ற ஊரில் உள்ள கோயில் தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்தக் கோயிலில் தண்டாயுதபாணி மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் அரசமரம் தல விருட்சமாக இருக்கிறது. சித்திரையில் காவடி பெருவிழா, ஆகஸ்ட் 15ஆம் தேதி குரு ஜெயந்தி அன்று அன்னதானம், கிருத்திகை மற்றும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்கள் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் உள்ள முருகப் பெருமான் ஒவ்வொரு நாட்களும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படியே, அடுத்தநாள் முருகப் பெருமானுக்கு ஆண்டி அலங்காரம், சர்வ அலங்காரம், ராஜ அலங்காரம் உள்பட பல அலங்காரம் முருகனின் கட்டளைப்படியே செய்யப்படுகிறது. இது இன்றும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. படுகர் இன மக்கள் இந்தக் கோயிலில் பஜனை நடத்துகின்றனர்.

திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், மன அமைதிக்காகவும், நோய் துன்பம் நீங்கவும், ஆயுள் பலம் அதிகரிக்கவும், கல்வி அறிவு கூடவும், செல்வ செழிப்பு உண்டாகவும், விவசாயம் செழிக்கவும் இந்தக் கோயிலில் உள்ள முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், காவடி, பால் குடம் எடுத்தல், முடி இறக்குதல், காது குத்துதல் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்படுகிறது. இயற்கை அமைப்புடன் கூடிய மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதியை கொடுக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு குரு கிருஷ்ண நந்தாஜி என்பவர் இங்குள்ள காடுகளில் சுற்றித் திரிந்துவிட்டு இப்போதுள்ள மலைக்கு அருகில் உள்ள சிவன் குகைக்குள் சிலகாலம் கடும் தவம் மேற்கொண்டார். பின்பு அழகிய எழில் சூழ்ந்த அன்னமலைக் குன்றில் தண்டாயுதபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். நாளடைவில் முருகப் பெருமானின் அருளால் இந்தக் கோயில் பிரபலமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.