திருமணத்தில் முகூர்த்தக்கால் நடப்படுவது ஏன்?

43

திருமணத்தில் முகூர்த்தக்கால் நடப்படுவது ஏன்?

இந்து திருமணங்களில் திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக வீட்டிற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுகிறார்கள் என்று திருமணம் செய்பவர்களுக்கு கூட தெரியாது. காலங்காலமாக இந்த நடைமுறைகளை நமது முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். சரி, திருமண நிகழ்ச்சிகளின் போது ஏன் முகூர்த்தக்கால் நடுகிறார்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

திருமண நிகழ்ச்சியின் போது வீட்டிற்கு முன்பு முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலை தோரணம் கட்டுவது போன்றவை மரபு. இதற்கு மூங்கில் மரங்களை வாங்கி வந்து அதற்கு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து வடகிழக்கு மூலையில் நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை ஈசான்ய திசை என்று கூறுவர்.

இந்த திசையானது சிவனின் அம்சம் கொண்ட தேவனுக்குரிய திசை. ஆகையால், நடைபெறும் திருமணம் இறைவன் அருளால் மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைக் குறிக்கவே இந்த முகூர்த்தக்கால் நடப்படுகிறது. பழங்காலத்தில் திருமணம் செய்யும் போது அந்த நாட்டின் மன்னருக்கும் திருமணம் குறித்து தெரியப்படுத்துவார்கள். அப்படி சொல்லப்படும் எல்லா திருமண நிகழ்ச்சிக்கும் மன்னரால் செல்ல முடியாது.

அப்படியிருக்கும் போது அவர் தனது ஆணைக்கோலை திருமண நிகழ்ச்சிக்கு அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோலானது நாளடைவில் அரசாணைக்கால் என்று ஆகிவிட்டது. அரசனால் வரமுடியாத திருமண நிகழ்ச்சிக்கு இந்த ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்த முறை தான் நாளடைவில் தொன்று தொட்டு வந்து பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் முறையாக மாறிவிட்டது.

திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னர், பந்தக்கால் நடும் முறை வந்தது. முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நட்டு முடிந்த பிறகு மணமகன் மற்றும் மணமகளுக்கு நலங்கு நிகழ்ச்சி நடைபெறும். திருமணம் நடைபெறும் நாள் வரை தினந்தோறும் காலை மற்றும் மாலையில் மணமக்களுக்கு நலங்கு வைக்கப்படும் ஒரு நிகழ்வு நடைபெறும். ஒவ்வொருவரது குடும்ப வழக்கப்படி இந்த நிகழ்வு நடக்கும். இதில், அக்கா, தங்கை உறவு முறையைச் சேர்ந்தவர்கள் மணமகனுக்கு நலங்கு வைப்பார்கள்.

பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நட்டு முடிந்த பிறகு பந்தல் போடுவார்கள். இந்நிகழ்ச்சியின் இருவீட்டாரும் கலந்து கொண்டு விருந்து உண்டு மகிழ்வார்கள். முகூர்த்தக்கால் ஊன்றிய பிறகு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய வீட்டாரைச் சேர்ந்தவர்கள் எந்தவித துக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார்கள்.