திருமண தடையை நீக்கி வளமான வாழ்வுக்கு அட்சய திருதியை விரதம்!

190

திருமண தடையை நீக்கி வளமான வாழ்வுக்கு அட்சய திருதியை விரதம்!

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த 3 நாட்களில் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என்று அழைக்கிறோம். அட்சயா என்பதற்கு எப்போதும் குறையாதது என்பது பொருள். இந்த நாள் தங்கம், வெள்ளி, வைரம், விலைமதிப்பற்ற கற்கள், வீடு மனைகள் வாங்க உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும்.

இந்த நாளில் நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை என்று ஏதாவது தானம் செய்ய தானம் இன்று கொடுக்கப்படும் பொருட்கள் உங்களுக்கு பெருகிக் கொண்டே இருக்கும்.

இந்த ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் தேதியான இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்று காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி நாளை காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அட்சய திருதியை நாளான இன்று காலை 5:49 மணி முதல் பிற்பகல் 12:13 முகூர்த்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தங்கம் வாங்க ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கடைக்கு சென்று தங்க நகையோ, நாணயமோ வாங்கலாம்.

அட்சய திருதியை நாளில் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும். ஆகையால் இந்த நாளில் நகைக் கடைக்கு சென்று தங்க நகை அல்லது நாணயம் வாங்குவது வழக்கம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் வளமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்க முடியாதவர்கள் அரிசி, கல் உப்பு, மஞ்சள் ஆகியவற்றை கூட இன்று வாங்கலாம்.

அரிசி வாங்கினால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பஞ்சம் வராது என்பது ஐதீகம். உப்பு வாங்கினால், திருஷ்டி விலகும். மஞ்சள் வாங்கினால் வாழ்க்கையில் மங்களம் உண்டாகும். மங்களகரமான சுப நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. தான தர்மங்கள் செய்தால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்.

திருமணமாகாத பெண்களாக இருந்தால் நல்ல குணங்கள் கொண்ட கணவனும், ஆண்களாக இருந்தால் நற்பண்புகள் கொண்ட மனைவியும் அமைய அட்சய திருதியை விரதம் உகந்ததாக இருக்கும். இந்த நாளில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள நமக்கும், நமது சந்ததியினரின் வாழ்வும் சிறக்கும். இந்த நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் தானம் அளித்தால் ஆயுள் விருத்தியாகும்.

இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி அட்சய திருதியை விரதம் இருந்தால் நமது வாழ்வு வளம் பெறும், செல்வம் சேரும் என்பது ஐதீகம். ஒரு எவர்சில்வர் அல்லது தாமிர செம்பில் தங்க நாணயம் அல்லது தங்க நகை, சிறிது அரிசி, மஞ்சள், நாணயம் ஆகியவற்றை போட்டு, செம்பில் நீரை நிரப்பி அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

அதன் பிறகு நீர் நிரம்பிய செம்பில் தேங்காயை வைத்து, சுற்றிலும் சுத்தமான மாவிலை வைத்து கலசம் தயாரித்து அதனை ஒரு மரப்பலகையின் மீது வைக்க வேண்டும். பிறகு கலசத்தின் முன்பாக ஒரு வாழை இலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து குங்குமம் வைத்து பூ மாலை சாற்ற வேண்டும். அதன் பிறகு வாழையிலையில் அரிசியை பரப்பி அதன் மீது விளக்கேற்ற வேண்டும். இதையடுத்து, புதிதாக வாங்கிய தங்க நகைகள், பொருட்களையும் கலசத்திற்கு முன்பு வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வளமான வாழ்வு கிடைக்கும்.

இந்த அட்சய திருதியை நாளில் விரதமிருந்து குலதெய்வ வழிபாடு செய்தால் நமக்கும், நமது சந்த தியினருக்கும் வாழ்வு சிறக்கும். ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் கொடுத்தால் ஆயுள் விருத்தியாகும். அதோடு, 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்பும், வற்றாத செல்வமும் கிடைக்கப் பெறும். முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்யாதவர்கள் இந்த அட்சய திருதியை நாளில் தர்ப்பணம் செய்ய பாவ விமோட்சனம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.