திருவண்ணாமலை பெரிய நந்தி பகவான் கால் மாற்றிய வரலாறு தெரியுமா?
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் நந்தி பகவான் இடது காலை மடக்கி வலது காலை முன் வைத்து அமர்ந்திருக்கும். அண்ணாமலையார் கோயிலில் மட்டும் பெரிய நந்தி வலது காலை மடக்கி இடது காலை முன் வைத்து அமர்ந்திருக்கும். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
திருவண்ணாமலைக்கு ஒரு மாற்று அரசன் வந்தார். அவர் கோயிலை சிதைக்க நினைத்தார். அப்பொழுது கோயிலுக்கு அருகாமையில் 5 சிவபக்தர்கள் காளை மாட்டினை பல்லக்கில் சுமந்து சென்று வழிபாடு செய்தனர். அதனைக் கண்ட அந்த அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளை மாட்டினை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என்று கேட்டான்?
இதற்கு, அந்த 5 சிவ பக்தர்கள், காளை மாடு சிவபெருமானின் வாகனம். அவரை சுமக்கும் காளை வாகனத்தை நாங்கள் சுமப்பது பாக்கியம் என்றனர். அதற்கு அந்த அரசன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி கொண்டவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன். அதனை மீண்டும் ஒன்றாக சேர்த்து உயிர் கொடுக்க சொல் என்று கூறி வெட்டினான். இதனால், அதிர்ச்சியடைந்த சிவபகதர்கள் அண்ணாமலையாரிடம் முறையிட, அண்ணாமலையார் அசரீரியாய் ஒலித்து, வடக்கில் என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக் கொண்டிருக்கிறான். அவனை அழைத்து வாருங்கள் என்றார்.
இறைவன் கூறியபடி சிவபக்தர்கள் ஐந்து பேரும், அந்த இடத்திற்கு சென்று பாலகனை கண்டனர். அப்போது, காட்டிலிருந்து வந்த புலி ஒன்று சிவபக்தர்களை தாக்க முற்பட்டது. இதில், அதிர்ச்சியடைந்த சிவபக்தர்கள் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதையடுத்து, பாலகன் சிவனின், நமசிவாய மந்திரம் சொல்லி அந்த புலியை விரட்டியடித்து, சிவபக்தர்களை காப்பாற்றினான்.
அண்ணாமலையார் கூறியதைத் தொடர்ந்து, அந்த சிறு பாலகனிடம் நடந்தவற்றை கூறி, அழைத்துச் சென்றனர். அண்ணாமலையார் கோயிலுக்கு அவர்கள் வந்தனர். அப்போது, அங்கிருந்த அரசனிடம், இரண்டாக பிளவுபட்ட காளை மாட்டிற்கு தான் உயிர் கொடுப்பதாக அந்த சிறுவன் கூறினான்.
முதலில் அண்ணாமலையாரை வணங்கிவிட்டு ஓம் நமசிவாய மந்திரம் சொல்லிவிட்டு அந்த மாட்டினை இணைத்து உயிர் பெறச் செய்தார். ஆனால், அந்த சிறுவனை அரசன் நம்பவே இல்லை. ஆதலால், சிறுவனுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்தான். அதில், வெற்றி பெற்றால் கோயிலை இடிக்க மாட்டேன் என்றும் இல்லையென்றால், கோயிலை இடித்து விடுவேன் என்றும் கூறினான். சரி என்று அந்த சிறுவனும் போட்டிக்கு சம்மதம் தெரிவித்தான்.
அதன்படி, இறைவனுக்கு மாமிசம் படைக்கப்பட்ட்து. அண்ணாமலையாருக்கு சக்தி இருந்தால் மாமிசம் அனைத்தும் பூவாக மாற்றட்டும் என்று கூறினான். இறைவனுக்கு படைக்கப்பட்ட மாமிசம் பூக்களாகவே மாறியது.
இதைக்கண்ட சிவ பக்தர்கள் மற்றும் அந்த சிறு பாலகன், ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி அண்ணாமலையாரை வழிபட்டனர். ஆனால், அந்த அரசனுக்கு இதிலும் திருப்தி இல்லை. கடைசியாக ஒரு போட்டி வைத்தான். அதில், பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடக்கி அமர வேண்டும். அப்படி மாற்றி அமர்ந்து விட்டால், இந்தக் கோயிலை சிதைக்கும் எண்ணத்தை விட்டுவிடுகிறேன் என்றான்.
அரசன் கூறியதைத் தொடர்ந்து பாலகன், ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி, அண்ணாமலையாரிடம் வேண்டினர். இதையடுத்து நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி அமரும்படி அண்ணாமலையார் உத்தரவிட்டார். அப்போது முதல் பெரிய நந்தி பகவான் தனது வலது காலை மடக்கி இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கியபடி காட்சி தருகிறார். அந்த சிறுவனோ வீரேகிய முனிவர் என்று அழைக்கப்படுகிறார். அவரத் நினைவாக இங்கு கோயிலும், மடமும் இருப்பதாக கூறப்படுகிறது.