தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

176

தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?

ஐப்பசி அமாவாசை நாளான இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில் ஒவ்வொருவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, மத்தாப்பு கொளுத்தி இந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்.

தீபாவளி கொண்டாடும் முறை:

கிருஷ்ண பகவான், அதிகாலை நேரத்தில் தான் நரகாசூரனை அழித்து, அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை முழுகினார் என்பதால், தீபாவளி அன்று அதிகாலை 3 அல்லது 4 மணிக்குள்ளாக எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். பொதுவாக வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க: தீபாவளி ஏன், எதற்கு கொண்டாடப்படுகிறது?

எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

கங்கா ஸ்நானம்: தீபாவளியன்றாலே நாம் முதலில் செய்ய வேண்டிய ஒன்று தான் இந்த கங்கா ஸ்நானம். அதிகாலை 3 மணியிலிந்து 4 மணிக்குள்ளாக எழுந்து குளித்து முடித்துவிட வேண்டும்.

அமாவாசை நாளன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் உண்டு. ஆனால், தீபாவளி திருநாளோடு வரும் அமாவாசை என்பதால், இந்த நாளில் எந்த தோஷமும் கிடையாது. ஆகையால் அதிகாலையிலேயே அதாவது 3 மணியிலிருந்து 4 மணிக்குள்ளாக எழுந்து எண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டு சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்து முடித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு பலகாரங்கள் செய்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து மகிழ வேண்டும். மேலும், பரிசுகள் கொடுக்கும் வழக்கமும் உண்டு. அப்படியில்லை என்றால், பணம் கொடுத்து பழக வேண்டும். பழங்காலத்தில் இந்த பழக்க வழக்கம் இருந்துள்ளது. பெரியோரை வணங்கி அவர்களிடம் ஆசி வாங்க வேண்டும்.

மேலும் படிக்க: தீபாவளி 5 நாட்கள் பண்டிகை எப்படி தெரியுமா?

அசைவம் சாப்பிடக் கூடாது:

இந்த தீபாவளி என்றில்லை, எந்த தீபாவளியாக இருந்தாலும், அன்று அமாவாசை திதி சேர்ந்து வந்தால், அன்றைய நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு பெண்கள் கேதார் கௌரி விரதம் இருந்து வழிபடுவார்கள். நோன்பு எடுக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இந்த அமாவாசை + தீபாவளி நாளில் வீடுகளில் அசைவம் எடுத்து சமைக்க கூடாது. வெளியில் சென்றும் சாப்பிடக் கூடாது.

நமது முன்னோர்கள், நாம் காட்டும் நரக சதுர்த்தசி மற்றும் ஐப்பசி அமாவாசை ஆகிய இந்த இரு நாட்களின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கத்தை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். மஹாள பட்ச நாளில் பூமிக்கு வந்த முன்னோர்கள் ஐப்பசி மாத அமாவாசை நாளில் மேல் லோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால், இந்த நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. இல்லை, அதெல்லாம் ஒன்றுமில்லை என்று நீங்கள் சொல்லிவிட்டு சாப்பிட்டால் பாவம் தான் வந்து சேரும்.

கேதார் கௌரி விரதம்:

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை. சிவபெருமானுக்கு கடைபிடிக்கப்படும் 9 விரதங்களில் ஒன்று தான் இந்த கேதார கௌரி விரதம் (கேதார் கௌரி விரதம்).

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்று. இதனை கன்னிப் பெண்கள் தான் அனுஷ்டிப்பார்கள். நல்ல கணவன் வேண்டியும், கணவருடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக கன்னிமார்கள், சுமங்கலி பெண்களும் தான் வழிபடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த விரதம் கடைபிடிக்கும் 21 நாட்கள் சிவபெருமானை வழிபட்டு 21 முடிச்சுகள் கொண்ட நூலினை 21 ஆவது நாளில் அதாவது அமாவாசை நாளில் நோன்பு கயிறை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இமயமலைச் சாரல் கொண்ட வயல் சார்ந்த மலைப்பகுதி கேதாரம் ஆகும். இந்த இமயமலை கேதாரப் பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்வரர் தோன்றினார். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபாடு செய்துள்ளார். இதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவரராகவும் ஒன்றுபட்ட தினம் தான் கேதாரி கௌரி விரதம்.

வயலின் ஆலமரத்துக்கு அடியில் இருந்து இந்த விரதம் மேற்கொள்ளப்படதால் கேதார கௌரி விரதம் என்றும், சிவபெருமானை வழிபடுகின்றதால் கேதாரேஸ்வரி என்றும் பெயர் பெற்றுள்ளது.

லட்சுமி குபேர பூஜை:

லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். பூஜையறையில் லட்சுமி குபேரர் பட த்தை வைத்து பட த்திற்கு இருபுறமும் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மேலும் படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில், நவ தானியங்கள் வைத்து, சுத்தமான செம்பு ஒன்றில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். அந்த செம்பில் வெள்ளை நிற நூலுக்கு மஞ்சள் தடவி, அந்த நூலை செம்பு முழுவதும் சுற்ற வேண்டும். பிறகு செம்புக்குள் மாவிலை உடன் தேங்காய் சேர்த்து வைக்க வேண்டும். அதற்கு பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

பூஜைக்கு நைவேத்தியமாக பழங்கள், இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். மேலும், பூஜையில் தட்சணை காசு வைக்க வேண்டும்.

அதன் பிறகு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை தொடங்க வேண்டும். எப்போது விநாயகர் துதி பாடல்கள் மூலமாக பூஜையை தொடங்க வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமியை போற்றி வழிபட வேண்டும். தொடர்ந்து குபேர மந்திரங்கள் சொல்ல வேண்டும். அப்படியில்லை என்றால் குபேராய நமஹ, தன்பதியே நமஹ என்று 108 முறை சொல்லி குபேரரை வழிபட வேண்டும்.

மேலும் படிக்க:சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க தீபாவளி நாளில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை!

இந்த லட்சுமி குபேர பூஜை முடிந்த உடன் தட்சணை காசை எடுத்து வீட்டு பீரோ அல்லது பணம் இருக்குமிடத்தில் வைத்துவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். அதோடு, பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

லட்சுமி குபேர பூஜையை தீபாவளி திருநாளில் செய்யும் போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். அதோடு, செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தருவார் என்பது ஐதீகம்.

மத்தாப்பு கொளுத்த வேண்டும்:

சரவெடி, அணுகுண்டு, லட்சுமி வெடி, சீனி வெடி என்று எந்த வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் சொல்லப்படவிட்டாலும், கண்டிப்பாக மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போ, பழங்காலத்தில் மத்தாப்பு இருந்தா? தீபாவளி கொண்டாடினார்களா? என்று கேட்பது புரிகிறது. துலா மாதமான ஐப்பசி மாதம் தீபாவளியன்று உல்கா எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்பது தான் பொருள்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாதா? இதென்னா புதுசா இருக்கே?

நெருப்பை கையில் பிடியுங்கள் என்றால், மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. மத்தாப்பு போன்ற ஒன்றை ஏற்ற வேண்டும் என்று தான் சொல்லியுள்ளது. எனவே மத்தாப்பை கொளுத்தி இந்த தீபாவளி நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.