தும்மினால் ஆயுசு 100, 200…என்று சொல்வது ஏன்?

265

தும்மினால் ஆயுசு 100, 200…என்று சொல்வது ஏன்?

தும்மல் என்பது இயற்கையான ஒன்று தான். அது எப்போது வரும், எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. தும்மும் போது ஆயுசு நூறு என்றும், ஒரு முறை தும்மினால் 100 என்றும் 2ஆவது முறை தும்மினால் 200 என்றும் சொல்வார்கள். உண்மையில் சொல்லப் போனால், தூசி, துரும்பிலிருந்து உங்களை எச்சரிப்பதற்காக வருவது தான் தும்மல் என்பது அறிவியல் உண்மை.

சளி, ஜலதோஷம், சைனஸ், வைரல் தொற்று ஆகியவையும் வரப்போகிறது என்பதை உணர்த்துவதற்காக வருவது தான் தும்மல். இதிலிருந்து உங்களை காத்துக்கொண்டால் நூறாண்டு காலம் வாழலாம் என்பதன் அர்த்தம் தான் ஆயுசு நூறு.

மழையில் நனைவது, தூசியில் வேலை பார்ப்பது, அஜீரணக் கோளாறு ஆகியவற்றால் கூட சிலருக்கு தும்மல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த தும்மல் ஓரிரு முறை தான் வரும். வந்ததும் நின்றுவிடும். உடலுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சிலருக்கு நுரையீரலில் ஏறபடும் மாற்றம் காரணமாக கூட தும்மல் வரும். அது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நிற்பதற்கு கூட சிறிது நேரம் ஆகும். இதனால், உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சிலருக்கு தும்மல் வந்தால் உயிரே போகும் அளவிற்கு மார்பும், விலா எலும்புகளும் வலிக்கும். உடலில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களோ அல்லது ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களோ தும்மல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு பிரச்சனையாக கூடும். தும்மினால் ஒட்டியிருக்கும் எலும்போ, அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட தையலோ பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இன்னும் சிலருக்கு தும்மினால் கை, கால், முதுகு பிடித்துக் கொள்ளும். தும்மலை யாராலும் அடக்கவும் முடியாது. தும்மலை அடக்கினால் கூட நுரையீரல் பாதிப்பு வரும். ஆதலால், தும்மும் போது துண்டால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் கைக்குட்டை கொண்டு அல்லது முக கவசம் கொண்டு மெதுவாக தும்ம முயற்சிக்க வேண்டும். இனிமேல், தும்மல் வருவதாக உணர்ந்தால் இது போன்ற செய்ய முயற்சிக்க வேண்டும்.

 1. முதலில் கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் கிடுக்கி போன்று நுனி மூக்கைப் பிடித்து மெதுவாக ஆட்ட வேண்டும். அப்படி செய்தால் தும்மல் வராது.
 2. இரு கண்களுக்கு இடையிலுள்ள நெற்றியை மெதுவாக தட்டினால் தும்மல் நின்றுவிடும்.
 3. வாயிலிருந்து காற்றை ஊதி ஊதி வெளியே தள்ள வேண்டும்.
 4. தும்மும் போது துண்டால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் கைக்குட்டை கொண்டு அல்லது முக கவசம் கொண்டு மெதுவாக தும்ம முயற்சிக்க வேண்டும்.
 5. வாயை மூடிக் கொண்டு மூச்சுக்காற்றை மூக்கின் வழியாக வேகமாக வெளியேற்ற முயற்சிக்க வேண்டும்.
 6. எக்காரணம் கொண்டும் உள்ளங்கையை கொண்டு சென்று, மூக்கிற்கும், வாய்க்கும் இடையில் வைத்து தும்மக் கூடாது. அது உள்ளங்கையில் கிருமிகளை தங்க வைக்கும்.
 7. நீங்கள் வீட்டில் இருக்கும் போது தும்மல் வந்தால் சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டு மூக்கை நன்றாக கழுவ வேண்டும்.
 8. ஒருவேளை உங்களது வீடுகளில் செல்லப் பிராணிகள் இருந்தால் அதனை கொஞ்சம் தூரமாக இருக்க வைக்கப் பாருங்கள். ஏனென்றால், அதனால், கூட தும்மல் வரலாம்.
 9. ஆவி பிடித்தால் தும்மல் நின்றுவிடும். வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது நல்லது.
 10. அலர்ஜி இருப்பவர்கள், தூசு நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், நீங்கள் வீட்டில் இருக்கும் போது தூசு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 11. ஏசி காற்று முகத்தின் படும்படி உட்காரக் கூடாது.
 12. ஊதுபத்தி புகை, சாம்பிராணி புகை, பட்டாசு புகை, சிகரெட் புகை, வாகனப் புகை ஆகியவற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.

யாரேனும் உங்களுக்கு அருகில் இருக்கும் போது தும்மல் வந்தால் தனியாக சென்று தும்ம வேண்டும். அப்படியில்லை என்றால் தும்மும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அது பலவகையில் நோய் பரவாமல் தடுக்க உதவும். உண்மையில் தும்மல் என்பது நோயல்ல, ஒரு எச்சரிக்கை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.