தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு

190

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்,

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.

பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.

ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’
-(என்கிறது அகஸ்தியர் நாடி)

சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.

சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த சட்டைநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, “தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்டை நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே” என்கிறார் அகஸ்தியர்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் சொர்ண பைரவ அஷ்டகத்தை படித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

வாரம் முழுவதும் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:

பைரவருக்கு செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு. பைரவரை வணங்கும் பொழுது வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை:
பிரதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும்.

திங்கட்கிழமை:
திங்கட்கிழமை அன்று வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சித்தால் சிவனருள் கிடைக்கும். மேலும் சங்கடஹர சதுர்த்தி அன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாத்தினால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகித் தெளிவான பார்வை கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பக் கிடைக்கும்படி அருள் புரிவார் பைரவர்.

புதன்கிழமை:
பூமி லாபம் கிடைக்க பிரதி புதன்கிழமை பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

வியாழக்கிழமை:
பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

சனிக்கிழமை:
சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.

இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் நாம் செய்யும் கால பைரவரின் வழிபாடு மற்றும் பைரவ அஷ்டக பாராயணம் நமக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி திருமணத் தடைகளை நீக்கி சகல நன்மைகளைத் தரும்.

ஸ்வானத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச்செல்வனாரே!… – திருநாவுக்கரசர்.

– தலம் திருச்சேறை ( நான்காம் திருமுறை. திருப்பதிக எண் : 73/6 )
தேவாரத்தில் வைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.

திருச்சேறை என்னும் திருத்தலத்தில் திருநாவுக்கரசர் உழவாரப் பணி புரிந்து இறைவனைத் தரிசித்தனர். அப்போது பாடிப் பரவிய திருப்பதிகத்தில் கால வைரவரின் திருமேனியழகை வர்ணிக்கின்றார்..

”பற்பலவாய் விரிந்து எங்கும் பரவும் ஒளிக் கதிர்கள் பொருந்திய சூலத்தினையும் வெடியென முழங்கும் உடுக்கையையும் தம் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்துடன் கால வைரவன் எனத் தோன்றி – தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து தம் மீது ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட அருஞ்செயலைக் கண்டு, அச்சம் கொண்ட உமையவளை நோக்கி ஒளி பொருந்திய பெருஞ் சிரிப்புடன் அருள் செய்தாரே!… அந்த சிவபெருமான் செந்நெறிச் செல்வனாக இங்கே, திருச்சேறை எனும் இந்தத் திருத்தலத்தில் உறைந்து நமக்கும் புன்னகையுடன் அருள் புரிகின்றார் ” – என்பது திருக்குறிப்பு.

ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து, இத்திருப்பாடலை ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாராயணம் செய்து போற்றுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு.

ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒரு சிறப்புப்பெயர் உண்டு. அவை:-

மார்கழி – சங்கராஷ்டமி
தை – தேவதேவாஷ்டமி
மாசி – மகேஷ்வரரஷ்டமி
பங்குனி – திரியம்பகாஷ்டமி
சித்திரை – ஸ்நாதனாஷ்டமி
வைகாசி – சதாசிவாஷ்டமி
ஆனி – பகவதாஷ்டமி
ஆடி – நீலகண்டாஷ்டமி
ஆவணி – ஸ்தழனு அஷ்டமி
புரட்டாசி – சம்புகாஷ்டமி
ஐப்பசி – ஈசானசிவாஷ்டமி
கார்த்திகை – காலபைரவாஷ்டமி (இது எமவாதனை நீக்கம் மகாதேவாஷ்டமி)

குறிப்பு: பைரவருக்கு அர்த்தசாமபூஜை மிகவும் விசேஷமானதாகும். நாகப்பட்டிணம் மாவட்டம், சீர்காழியில், சட்டைநாதராய் அருள்புரியும் எம்பெருமானுக்கு செய்யப்படும் பூஜை விசேஷமானதாகும்)

சந்தன காப்பு அபிஷேகம்:

பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் (சிவபுராணம்). பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

பைரவ வழிபாடு:

காலையில் வழிபட்டால் – சர்வ நோய்கள் நீங்கும்.
பகலில் வழிபட்டால் – விரும்பியது கிட்டும்
மாலையில் வழிபட்டால் – அனைத்து பாவங்களும் விலகும்.
இரவு (அர்த்தசாமம்) வழிபட்டால் – எல்லா வளமும் பெருகும், மனம் ஒருமைப்படும், முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.

பைரவ தீபம்:

சிறு துணியில் (வெள்ளை / சிவப்பு நிறம்) மிளகை (18 எண்ணிக்கை) சிறுமூட்டையாகக் கட்டி அக்ல்விளக்கில் வைத்து நல்லெண்ணை தீபத்தை ஏற்றி வழிபட்டால் எல்லா வளமும் பெருகும்.

தினமும் காலையில் “ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நம: “, என்று உச்சரிப்பது நன்மை அளிக்கும்.

வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.