நவராத்திரியின் 7ஆம் நாள்: பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம் மற்றும் மந்திரம்!

133

நவராத்திரியின் 7ஆம் நாள்: பூஜை செய்யும் முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்!

சரஸ்வதி தேவி:

நவராத்திரி ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியும் வழிபாடு செய்யும் பழக்கமும் இருக்கிறது.

நவராத்திரியின் 7ஆம் நாள், அக்டோபர் 2 ஆம் தேதி:

கடந்த ஆறு நாட்களாக, நவராத்திரி முதல் நாள் தொடங்கி, ஒவ்வொரு நாளும் வணங்க வேண்டிய தேவியர், மந்திரம், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் ஆகியவற்றைப் பார்த்து வருகிறோம். தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெண்களால், பெண்களுக்காக, பெண் தெய்வங்களை கொண்டாடும் பண்டிகை தான் நவராத்திரி.

ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தி சொரூபமாக, துர்க்கையின் வடிவமாக கொண்டாடப்படுகிறது. மேலும், ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியும் வழிபாடு செய்யும் பழக்கமும் இருக்கிறது.

பிரதமை திதியில் தொடங்கும் நவராத்திரி, 9 நாட்கள் நீளும். 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் நாள் தொடங்கியது. அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று நவராத்திரியின் 7ஆம் நாள் பண்டிகை.

நவராத்திரி நாள் 7: அக்டோபர் 2, ஞாயிறுக்கிழமை

வழிபட வேண்டிய சக்தி தேவி: சரஸ்வதி தேவி, சாம்பவி தேவி, காளராத்ரி,

திதி: சப்தமி

நிறம்: ஆரஞ்சு

மலர்: தாழம்பூ, தும்பை

கோலம்: பூக்களால் சங்கு கோலம் போட வேண்டும்

ராகம்: பிலஹரி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் எலுமிச்சை சாதம் மற்றும் மாலை நேரத்தில் மொச்சைப் பயறு சுண்டல்

மந்திரம்: சரஸ்வதி நாமாவளி, சரஸ்வதி தேவி பாடல்கள், சௌந்தரிய லஹரி

பலன்கள்: எதிரிகள் காணாமல் போவார்கள், வீணான பயம் நீங்கும், கலைகளில் ஞானம், தேர்ச்சி, கல்வியில் மேன்மை

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதி தேவிக்கான நாட்களாக கொண்டாடப்படுவதால், கலைமகளை வணங்கலாம்.

சாம்பவி தேவி, மகா சரஸ்வதி தேவி போலவே, வெண் பட்டாடை அணிந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் அருள்வார். கலைகள், கல்வியில் சிறந்து விளங்க, முன்னேற்றம் பெற, நவராத்திரி ஏழாம் நாளன்று சாம்பவி தேவியை வணங்கி வழிபடலாம்.

நவதுர்க்கையின் வடிவங்களில் ஒன்றான காளராத்திரி அம்மன், எதிரிகளுக்கும் அச்சம் தரக்கூடியவர். காளராத்திரி என்பது காலத்தின் முடிவு என்று பொருள். உங்களுக்கு நீண்ட காலம் தொந்தரவு செய்யும் எதிரிகள் மற்றும் மறைமுக தீய சக்திகள் அனைத்து காணாமல் போகும்.

பூஜை செய்யும் முறை:

பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இன்று சரஸ்வதி தேவிக்கான நாள் என்பதால், சாம்பவியும் சரஸ்வதியின் மறு உருவமாக வணங்கப்படுவதால், சரஸ்வதி தேவிக்கான ஸ்லோகம், பாடல்களை ஒலிக்கலாம். பூஜை செய்யும் போது சௌந்தர்யா லஹரியை ஒலிக்கச் செய்வது சிறப்பு.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், பூக்களால் சங்கு வடிவத்தில் கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி என்பதால், இன்று உங்களால் இயன்ற அளவுக்கு சிறுமிகளுக்கு படிப்பு சம்மந்தமான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வெற்றிலை பாக்கு, தாம்பூலத்தோடு மாதுளைப்பழம் வைத்துக் கொடுப்பது சிறப்பு.

எதிரிகள் தொல்லை நீங்க, வீடும் குடும்பமும் சுபிட்சம் பெற, ஒரு சிறுமியை வீட்டுக்கு அழைத்து, அவரை அம்பாளாக வணங்கி, வெண்பட்டாடை வழங்கி வணங்கலாம்.

ஞாயிறு என்பதால் அன்று முடிந்தால், நவராத்திரி பூஜை செய்த பின்பு, துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

பூஜைக்கான நேரம்:

காலை 9 மணிக்குள்

மாலை 6 மணிக்கு மேல்

நவராத்திரிக்கு கொலு வைக்காதவர்கள் எவ்வாறு பூஜை மற்றும் விரதத்தை கடைபிடிக்கலாம்

கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம். நவராத்திரி ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், இது வரை அகண்ட தீபம் எற்றாதவர்கள் கூட ஏற்றி வழபடலாம்.

அகண்ட தீபம் என்றால் அணையா விளக்கு. அகண்ட தீபம் என்பது, வழக்கமாக நாம் ஏற்றும் அகல் தீபத்தைத் தான் குறிக்கிறது.

காலை, மாலை, இரவென்று அகண்ட தீபம் அணையாமல் 9 நாட்களும் எரிய வேண்டும். கொலு தவிர்த்து, மீதியுள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம். சப்தமி திதியில், கலைமகளை வேண்டி, கல்வி, கலைகளில் சிறந்து விளங்க, நவராத்திரியின் ஏழாம் நாளில் ஏற்றி மூன்று நாட்களுக்கு அகண்ட தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நவராத்திரி தொடக்க நாளன்று ஏற்ற முடியாதவர்கள், ராகு காலம் எமகண்டம் தவிர்த்து, நவராத்திருக்கு பூஜை செய்யும் முன்பு, நன்றாக பிரார்த்தனை செய்து அகண்ட தீபம் ஏற்றலாம்.