நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது?

101

நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது?

பண்டிகை நாட்களில் ஒவ்வொரு பண்டிகை, திருவிழாவையும் காரணம் இல்லாமல் நமது முன்னோர்கள் கடைபிடித்து வரவில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணம் வைத்திருந்தார்கள். ஆனால், அதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதில் அக்கறையும், ஆர்வமும் காட்டுவதில்லை. சரி, நவராத்திரி பண்டிகை ஏன், எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் பார்ப்போம்.

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை. இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது. தீபாவளி, சிவராத்திரி, ஜென்மாஷ்டமி, தசரா, ஹோலி ஆகிய பண்டிகைகள் சூரியன் அஸ்தமனம் ஆனதற்கு பின்பு தான் கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்து புராணங்களில் இரவுகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது என்பது வழக்கமான ஒன்று.

புரட்டாசி மாதம் – நவராத்திரி விரதம்:

ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியை) நினைத்து மேற்கொள்ளப்படும் அல்லது கடைபிடிக்கப்படும் விரதம் தான் இந்த நவராத்திரி நோன்பு. இந்த காலத்திற்கு தட்சணாயன காலம் என்ற பெயரும் உண்டு. இந்த காலம் தேவர்களுக்கு இராகு காலம்.

தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும், உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தேவியை வழிபட சிறந்த காலங்கள் ஆகும். இந்த இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி நோன்பாக (விரதமாக) அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி தொடங்குவது எப்போது?

புரட்டாசி மாத த்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும். அந்த வகையில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

வழிபடும் முறை:

வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து அலங்காரம் செய்து ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்வர். ஒவ்வொரு நாளும் தேவியின் ஒவ்வொரு அதராத்தையும் வழிபாடு செய்வார்கள். அதோடு, ஒவ்வொரு தானிய வகைகளை வேக வைத்து தேவிக்கு நைவேத்தியம் செய்து படைத்து தேவியை வழிபடுவர்.

நவராத்தியின் ஒன்பது நாட்கள்:

பேரழிவு காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்பின போது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்த போது ஞான சக்தி தோன்றியது. கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்) என்ற கருத்தே நவராத்திரி விழா மூலமாக விளக்கப்படுகின்றது.

  1. நவராத்திரியில் முதல் 3 நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கை அம்மனின் ஆட்சிக் காலம்.
  2. நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞான சக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம்.
  3. இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நவராத்திரி:

புரட்டாசி மாதத்தின் போது, கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். சைவ கடவுளாக புதன் பகவான் விளங்குவதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதற்கு ஒரு காரணம் உண்டு. வெயில் காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் மாதம் தான் இந்த புரட்டாசி மாதம்.

இந்த மாதத்தின் போது பூமி தன்னுள் அடக்கி வைத்திருந்த வெப்பத்தை வெளியிடும். இதன் காரணமாக இந்த மாதத்தில் நமது உடலில் அளவுக்கு அதிகமான உஷ்ணம் ஏற்படும். இந்தக் காலங்களில் அசைவம் சாப்பிட்டால் உஷ்ணம் தொடர்பான நோய் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும். இதன் காரணமாக, இந்த மாதத்தில் அசைவம் தவிர்க்கப்பட்டது.

இந்த மாதம் வரும் போது நவராத்திரி விரதத்தின் மூலமாக விரதமிருந்து ஆரோக்கியமான தானியங்கள், காய்கறிகளை வைத்து சமையல் செய்து சாப்பிட்டு நமது ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

நவராத்திரியின் காரணம்:

இந்த காலத்தில் நமது கெட்ட எண்ணத்தை அழித்து நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொண்டு நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள இந்த நவராத்திரி விரதம் முக்கியமாக பயன்படுகிறது.