நவராத்திரி கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் என்ன?

91

நவராத்திரி கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் என்ன?

நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை. நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்). ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 7 ஆம் தேதி தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

நவராத்திரியின் முக்கியத்துவம்:

சிவபெருமான் தனது மனைவியான துர்கா தேவிக்கு தனது தாயை பார்த்து வருவதற்கு அந்த 9 நாட்கள் அனுமதி கொடுத்ததாக நம்பப்படுகிறது. அப்போது, மக்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்தாள். பிரம்ம தேவனிடம் தன்னை யாராலையும் அழிக்க முடியாத வரம் பெற்று சுற்றித் திரிந்த மகிஷாசுரனை, கடுதம் தவமிருந்து முப்பெரும் தேவிகளான பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் ஒன்றிணைந்து மகா காளியாக உருவெடுத்து மகிஷாசுரனை அழித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக துர்கா தேவி சக்தியின் ரூபமாக ஆற்றம் நிறைந்தவளாக காட்சி தருகிறாள். இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நாளில் துர்கா தேவியின் 9 வடிவங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.