நவராத்திரி முதல் நாள்: சைலபுத்ரி தேவி வழிபாடு!

193

நவராத்திரி முதல் நாள்: சைலபுத்ரி தேவி வழிபாடு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (7ஆம் தேதி) தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்ப்போம். நவராத்திரி முதல் நாளான பிரதமை திதியில் நவதுர்க்கையின் முக்கிய அம்சமான சைலபுத்ரி தேவியை வழிபடுகின்றனர்.

சைலபுத்ரி என்றால் மலைமகள் என்று பொருள். மலை அரசன் இமவானின் மகள் என்பதால், தேவிக்கு சைலபுத்ரி என்ற பெயர். இதைத் தொடர்ந்து சதி, பார்வதி, பவானி ஆகிய பெயர்களும் உள்ளன. ஹிமவானின் மகளாகவும் இருப்பதால், ஹேமாவதி என்ற பெயரும் இருக்கிறது. முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் தாட்சாயினி என்றும் அழைக்கப்படுகிறாள். இவளே பார்வதியாக பிறந்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டாள்.

யோகிகள், யோக சாதனைகளை இவளை நினைத்து தான் தொடங்குவார்கள். ஆதலால், சைலபுத்ரி தேவியே முதல் சக்தியாகவும் திகழ்கிறாள். நந்தியை (காளை) வாகனமாகவும், சூலாயுதத்தை தனது ஆயுதமாகவும் வைத்திருக்கிறாள்.

சைலபுத்ரி தேவியின் தியான மந்திரம்:

வந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்

விருஷபாருடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஷ்விநீம்

நந்தியின் மேல் ஏரி வருபவள், சூலத்தை ஆயுதமாக கொண்டவள், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளாக திகழ்பவளே பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் ஷைல புத்ரி தேவியை வணங்குகின்றேன். சைலபுத்ரி தேவியின் கோயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.