நவராத்திரி விரதம்: கன்னி பூஜை ஸ்பெஷல்!

101

நவராத்திரி விரதம்: கன்னி பூஜை ஸ்பெஷல்!

ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியை) நினைத்து மேற்கொள்ளப்படும் அல்லது கடைபிடிக்கப்படும் விரதம் தான் இந்த நவராத்திரி நோன்பு. நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது.

அதாவது நவம் என்றால் புதுமை. இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

நவராத்திரி தொடங்குவது எப்போது?

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும். அந்த வகையில் அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று நவராத்திரி வைபவம் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய இந்த நவராத்திரி வைபவம் வரும் 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

வழிபடும் முறை:

வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து அலங்காரம் செய்து ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்வர். ஒவ்வொரு நாளும் தேவியின் ஒவ்வொரு அதராத்தையும் வழிபாடு செய்வார்கள். அதோடு, ஒவ்வொரு தானிய வகைகளை வேக வைத்து தேவிக்கு நைவேத்தியம் செய்து படைத்து தேவியை வழிபடுவர்.

நவராத்திரி விரதம் – கன்னி பூஜை:

நவராத்திரி நாளில் விரதம் இருப்பவர்கள், இந்த 9 நாட்களும் ஒரு நேரம் மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்கள், தங்களது வீட்டுப் பகுதியில் இருக்கும் சுமங்கலிப் பெண்களை அழைத்து கொலுவிற்கு அருகில் அமரச் செய்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்கலாம். நவராத்திரியின் முக்கியமான பூஜை குமாரி பூஜை எனப்படும் கன்னி பூஜை.

இந்த கன்னி பூஜையானது, நவராத்திரியின் 8ஆவது நாளில் 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு கூப்பிட்டு அவர்களை அம்மனின் அம்சமாக கருதி, அவர்களுக்கு பொட்டு, வளையல், உணவு, இனிப்பு, ஆடை கொடுத்து வழிபடலாம்.

இதன் மூலமாக முப்பெரும் தேவிகளாக பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரது பரிபூரண அருள் கிடைக்கும். நவராத்திரி நிறைவு நாளான 15ஆம் தேதி துர்கா தேவிக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாண்டியா நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.