நவராத்திரி ஸ்பெஷல்: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் 9 நாட்கள் சக்தி வழிபாடு!

176

நவராத்திரி ஸ்பெஷல்: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் 9 நாட்கள் சக்தி வழிபாடு!

நவராத்திரி பண்டிகையானது 26 ஆம் தேதியான பிரதமை திதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம். ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

Also Read This: நவராத்திரி கொலு வைக்கும் முறை:நவராத்திரி கொலு எத்தனை படி வைக்கலாம்? எப்படி வைக்கலாம்?

எல்லாவற்றுக்கும் சக்தி தான் ஆதாரம் . அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம். சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை. நாம் பேச இயங்க, செயல்பட சக்தி வேண்டும். சிவன் அதை உணர்ந்துதான் சக்தியை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். மூன்றும் கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் என்று ஒதுக்கி ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம். கொலு வைத்து கொண்டாடி அம்பிகையை வழிபடுவதால் நமக்கு சக்தி கிடைக்கும். அந்த சக்தியை நாம் நல்வழிப்படுத்த வேண்டும்.

ஒன்பது அலங்காரங்கள்:

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளையும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

Read This Also: நவராத்திரி விரதம் எப்படி மேற்கொள்ள வேண்டும்?

நவராத்திரி முதல் நாள் – பிரதமை திதி:

நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

நவராத்திரி 2ஆவது நாள் துவிதியை திதி:

இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாக வும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.

நவராத்திரி 3ஆவது நாள் திரிதியை திதி:

மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

நவராத்திரி 4ஆவது நாள் சதுர்த்தி திதி:

நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

நவராத்திரி 5ஆவது நாள் பஞ்சமி திதி:

ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

நவராத்திரி 6ஆவது நாள் சஷ்டி திதி:

ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.

நவராத்திரி 7ஆவது நாள் சப்தமி திதி:

ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.

நவராத்திரி 8ஆவது நாள் அஷ்டமி திதி:

எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

நவராத்திரி 9ஆவது நாள் நவமி திதி:

ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னை யை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடலாம்.

விஜயதசமி:

பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

சக்தி தரும் நவராத்திரி:

விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும். நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.

ஓம் பார்வதி பரமேஸ்வர போற்றி!