நவராத்திரி 2ஆவது நாள்: பிரம்மச்சாரிணி தேவி வழிபாடு!

83

நவராத்திரி 2ஆவது நாள்: பிரம்மச்சாரிணி தேவி வழிபாடு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (7ஆம் தேதி) தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். இதற்கு முன்னதாக நவராத்திரி முதல் நாளுக்கான தேவியான சைலபுத்ரி வழிபாடு குறித்து பார்த்தோம்.

இந்தப் பதிவில் நவராத்திரி 2ஆம் நாளில், நவதுர்க்கையின் 2ஆவது அம்சமான பிரம்மச்சரணி அல்லது தேவி யோனி வழிபாடு செய்யப்படுகிறது. பிரம்ம என்பதற்கு தபஸ் என்பது பொருள். பிரம்மச்சாரிணி (பிரம்மச்சரிணி) என்றால் தப சாரிணி என்று பொருள். எப்போதும் எளிமையாக காட்சி தரக்கூடியவள். தனது வலது கரத்தில் கமண்டலம் வைத்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். வாகனம் ஏதும் இல்லாமல், இந்த பூமியில் நடப்பவளாக காட்சிபடுத்தப்படுகிறாள்.

பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் செய்தாள். நன்றி, அறிவு மற்றும் ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். தன்னை வணங்கி வழிபடுவோருக்கு பொறுமையை தந்தருளி கஷ்டமான சூழலில் மணம் தளராமல் இருக்கவும், சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருக்கவும் அருள் புரிந்திடுவாள்.

பிரம்மச்சாரிணி மந்திரம்:

ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்

தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன

பிரம்மசாரிணி தேவியின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக தேவியின் அருள் கிடைக்கும். இந்தியாவில் கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் புரிகிறாள்.