நவராத்திரி 3ஆம் நாள்: பூஜை மற்றும் வழிபாடு விளக்கம்!

57

நவராத்திரி 3ஆம் நாள்: பூஜை மற்றும் வழிபாடு விளக்கம்!

நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10 -வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.

இந்த மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 9 நாட்களும் இதன்படி பூஜைகள் செய்தால் அளவற்ற பலன்களை பெறலாம்.

மூன்றாம் நாள் 28.09.2022

வடிவம்: வாராகி (மக்கிஷனை அழித்தவள்)

பூஜை: 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.

திதி: திருதியை

கோலம்: மலர் கோலம் போட வேண்டும்.

பூக்கள்: செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம்: கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.

ராகம்: பாட வேண்டிய ராகம் காம்போதி.

பலன்: தணதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.