நவராத்திரி 9 நாட்களின் சிறப்பம்சம்!

87

நவராத்திரி 9 நாட்களின் சிறப்பம்சம்!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை. இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்: நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது?

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 7 ஆம் தேதி தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

நவராத்திரி முதல் நாள்:

இந்த ஆண்டு வரும் 7 ஆம் தேதி வியாழக் கிழமை அன்று நவராத்திரி தொடங்குகிறது. அன்று, பிரதமை திதியில் நவதுர்க்கையின் முக்கிய அம்சமான சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படும். சைலபுத்ரி தேவி, மலைகளின் மன்னர் என்றழைக்கப்படும் பர்வதராஜனின் மகள். சதி, பார்வதி, பவானி அல்லது ஹேமாவதி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

நவராத்திரி 2ஆம் நாள்:

வரும் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை நவராத்திரி 2ஆம் நாள். அன்று திதித்துவயம் திதியில், நவதுர்க்கையில் 2ஆவது அம்சமான பிரம்மச்சரணி அல்லது தேவி யோகினிக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த நாளில் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருளையும், பேரின்பத்தையும் அள்ளித் தருகிறாள்.

நவராத்திரி 3ஆம் நாள்:

வரும் 9ஆம் நாள் சனிக்கிழமை நவராத்திரி 3ஆம் நாள். அன்று சதுர்த்தி திதியில் நவதுர்க்கையில் 3ஆவது அம்சமான சந்திரகாண்ட தேவியை மனதார வணங்கி வழிபட துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி 4ஆம் நாள்:

வரும் 10ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரியின் 4ஆம் நாள். அன்று பஞ்சமி திதியின் போது நவதுர்க்கையின் 4ஆம் அம்சமான கூஷ்மாண்டா தேவியை பூஜித்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக பாவங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி 5ஆம் நாள்:

வரும் 11ஆம் நாள் திங்கள் கிழமை நவராத்திரியின் 5ஆம் நாள். அன்று சஷ்டி திதியின் போது நவதுர்க்கையின் 5ஆவது அம்சமான ஸ்கந்த மாதாவிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும். இதன் மூலமாக மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி 6ஆம் நாள்:

வரும் 12ஆம் நாள் செவ்வாய் கிழமை நவராத்திரியின் 6ஆம் நாள். அன்று சப்தமி திதியின் போது நவதுர்க்கையின் 6ஆவது அம்சமான காத்யாயினி தேவிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். இவளைத் தான் மகிஷாசுர மர்த்தினி என்று கூறுவார்கள். மகிஷாசுர மர்த்தினியை வழிபட துயரங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி 7ஆம் நாள்:

வரும் 13ஆம் நாள் புதன் கிழமை நவராத்திரியின் 7ஆம் நாள். அன்று அஷ்டமி திதியின் போது நவதுர்க்கையின் 7ஆவது அம்சமான காளராத்திரி தேவியை வழிபட வேண்டும். மிகவும் பயங்கரமான வடிவம் தான் இந்த காளராத்திரி தேவியின் வடிவம். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என்று பொருள்படும். இவளை வழிபட எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி 8ஆம் நாள்:

வரும் 14ஆம் நாள் வியாழன் கிழமை நவராத்திரியின் 8ஆம் நாள். அன்று நவமி திதியின் போது நவதுர்க்கையின் 8ஆவது அம்சமான மகாகௌரி தேவியை வழிபட வேண்டும். மகா என்றால் பெரிய, கௌரி என்றால் தூய்மையான என்று பொருள். மகா கௌரியை வழிபட அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

நவராத்திரி 9ஆம் நாள்:

வரும் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை நவராத்திரியின் 9ஆம் நாள். அன்று தசமி திதியின் போது நவதுர்க்கையின் 9ஆவது அம்சமான சித்திதாத்ரி தேவியை வழிபட வேண்டும். சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரியை வழிபட மனதில் உள்ள ஐயம் நீங்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி நிறைவு நாளான 15ஆம் தேதி துர்கா தேவிக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் முக்கியத்துவம்:

சிவபெருமான் தனது மனைவியான துர்கா தேவிக்கு தனது தாயை பார்த்து வருவதற்கு அந்த 9 நாட்கள் அனுமதி கொடுத்ததாக நம்பப்படுகிறது. அப்போது, மக்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அசுரனை வதம் செய்தாள். பிரம்ம தேவனிடம் தன்னை யாராலையும் அழிக்க முடியாத வரம் பெற்று சுற்றித் திரிந்த மகிஷாசுரனை, கடுதம் தவமிருந்து முப்பெரும் தேவிகளான பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் ஒன்றிணைந்து மகா காளியாக உருவெடுத்து மகிஷாசுரனை அழித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக துர்கா தேவி சக்தியின் ரூபமாக ஆற்றம் நிறைந்தவளாக காட்சி தருகிறாள். இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி நாளில் துர்கா தேவியின் 9 வடிவங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.

நவராத்திரி விரதம்:

நவராத்திரி நாளில் விரதம் இருப்பவர்கள், இந்த 9 நாட்களும் ஒரு நேரம் மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்கள், தங்களது வீட்டுப் பகுதியில் இருக்கும் சுமங்கலிப் பெண்களை அழைத்து கொலுவிற்கு அருகில் அமரச் செய்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் ஆகியவற்றை வழங்கலாம். நவராத்திரியின் முக்கியமான பூஜை குமாரி பூஜை எனப்படும் கன்னி பூஜை.

இந்த கன்னி பூஜையானது, நவராத்திரியின் 8ஆவது நாளில் 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு கூப்பிட்டு அவர்களை அம்மனின் அம்சமாக கருதி, அவர்களுக்கு பொட்டு, வளையல், உணவு, இனிப்பு, ஆடை கொடுத்து வழிபடலாம்.

இதன் மூலமாக முப்பெரும் தேவிகளாக பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரது பரிபூரண அருள் கிடைக்கும். நவராத்திரி நிறைவு நாளான 15ஆம் தேதி துர்கா தேவிக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாண்டியா நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.