நவராத்திரி 9 படிகளிலும் அலங்கரிக்க வேண்டியது என்னென்ன?

111

நவராத்திரி 9 படிகளிலும் அலங்கரிக்க வேண்டியது என்னென்ன?

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விசேஷ நாட்கள் இருக்கும். விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி இருப்பது போன்றும், சிவபெருமானுக்கு சிவராத்திரி, பிரதோஷம் என்று இருப்பது போன்றும் அன்னை ஆதிபராசக்திக்கோ நவராத்திரி என்று 9 நாட்கள் உள்ளன. நவராத்திரி 9 இரவுகளைக் கொண்டது. பெண்களைப் போற்றும் இந்த நவராத்திரி விழாவில் 9 நாட்களும் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு தேவிகள் வழிபாடு செய்யப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு படியிலும் பொம்மைகள் வைத்து அலங்கரித்து வழிபடுவது உண்டு. என்னென்ன பொம்மைகள் எந்தெந்த படிகளில் அமைத்து வழிபட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

ஒவ்வொரு ஆண்டு நவராத்திரி விழாவானது, பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும். நவராத்திரிக்கு எப்பொழுதும் கொலு பொம்மைகள் வைக்க மண் பொம்மையை பயன்படுத்துவது சிறந்தது.

இதற்கு என்ன காரணம் என்னவென்றால், பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் மண் பொம்மைகள் இயற்கையை குறிப்பிட்டு கூறுகிறது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை குறிப்பிட்டு கூறுவது தான் இந்த மண் பொம்மைகள். எப்படியென்றால், ஒரு குயவன் பொம்மை செய்வதற்கு முதலில் மண் தயார் செய்கிறார். இதற்காக மண்ணை நிலத்தில் மிதிக்கிறான். அதன் பிறகு அந்த மண்ணை தண்ணீர் ஊற்றி பொம்மையாக செய்கிறான். அந்த சிலை பொம்மையை நெருப்பில் சுடுகிறான்.

அதன் பின்னர், அதற்கு வர்ணம் தீட்டி காற்றில் காய வைக்கிறான். பின்னர், அந்த பொம்மையை தெய்வமாக நினைத்து வழிபடவும் செய்கிறான். இப்படி பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்ட மண் பொம்மைகளை கொலுவில் வைப்பதன் மூலமாக நாம் இறைவனை கொலுவில் இடம் பெறச் செய்ய முடியும். ஆனால், ஒரு போதும் பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகளை வைக்க கூடாது.

நவராத்திரியின் போது வைக்கப்படும் கொலுவில் 9 படிகளில் 9 விதமான பொம்மைகள் வைப்பார்கள். அந்த 9 படிகளையும் மூடுவதற்கு வெள்ளை நிற துணியைத் தான் பயன்படுத்துவார்கள்.

நவராத்திரி கொலு: முதல் படி:-

முதல் படியில் ஓரறிவு கொண்டுள்ள மரம், செடி, கொடிகள், புல், பூண்டு போன்ற தாவர வகைகளை அலங்காரங்களாக செய்து வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 2ஆவது படி:-

2ஆது படியில் இரண்டறிவு கொண்ட உயிரினங்களான நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 3ஆவது படி:-

3ஆது படியில் மூன்றறிவு கொண்ட ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களான எறும்பு, கரையான், அட்டை ஆகிய பொம்மைகளை வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 4ஆவது படி:-

4ஆது படியில் நான்கறிவு கொண்ட நீர்வாழ் உயிரினங்களான நண்டு, தும்பி, வண்டு வகைகளைச் சேர்ந்த பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 5ஆவது படி:-

5ஆது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களின் பொம்மைகளை வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 6ஆவது படி:-

இந்த 6ஆவது படியில் எப்பொழுதும் மனிதர்கள் தான் இடம்பெறுவார்கள். மனிதர்கள் 6 அறிவு கொண்டவர்கள். இந்த மனிதர்களை சித்தரிக்கும் வகையில், செட்டியார், தலையாட்டி பொம்மை, உழவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள் போன்ற மனித உருவம் கொண்ட பொம்மைகளை வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 7ஆவது படி:-

7ஆது படியில் அரசாட்சி புரிந்த மன்னர்கள், குருமார்கள் இடம் பெற செய்யலாம். அப்படியில்லை என்றால் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மனித உருவில் வாழ்ந்து மறைந்த தெய்வங்கள் ஆகியோரது திரு உருவ சிலைகளை வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 8ஆவது படி:-

இந்த 8ஆவது படியில் நவக்கிரகங்களில் இருக்கும் நவக்கிரகங்களை அடுக்கி வைக்கலாம். தேவர்கள், தேவதைகள், அஷ்டதிக்கு பாலகர்கள் ஆகியோரது பொம்மைகளையும் அடுக்கி வைக்கலாம். இவ்வளவு ஏன், தசாவதாரங்களை உணர்த்தும் வகையில் தசாவதார பொம்மைகளை வைக்கலாம்.

நவராத்திரி கொலு: 9ஆவது படி:-

இதுதான் 9ஆவது படி, அப்படியில்லை என்றால் மேலிருந்து முதல்படி. இந்தப் படியில், கோயில்களில் வீற்றிருக்கும் மகா சக்தி வாய்ந்த தெய்வங்களை வைக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரது பொம்மைகளை அவசியம் வைக்க வேண்டும். இந்த பொம்மைகளுடன் சேர்ந்து கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் கொடுக்கும் முப்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சிலைகளை வைக்க வேண்டும். பின்னர், ஆதிபராசக்தியான உமையவளை நடுவில் வைத்து அவளது ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் படியில் ஆரம்பித்து 9ஆம் படி வரையில் இப்படி பொம்மைகளை அடுக்கி வைப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது, மனிதன் ஓரறிவு விஷயங்களான புல், பூண்டு ஆகியவற்றை தனது அறிவாற்றல் மூலமாக கற்றுக் கொண்டு படிப்படியாக உயர்ந்து 9ஆம் படியில் உள்ள இறைவனை அடைகிறான் என்பதன் அறிகுறிதான் இந்த 9 படிகளில் உள்ள 9 வகையான பொம்மைகள்.