பஞ்சாப் பொற்கோவில் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்!
சீக்கிய மதத்தின் புனித இடமாக கருதப்படும் ஹர்மந்திர் சாஹேப் உலகின் பிரபலமான மத வழிபாட்டுத்தலங்களுள் ஒன்றாகும். தங்க கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த இடத்தை பற்றி இதுவரை வெளிவராத சில ரகசியங்களை பார்ப்போம்.
இந்த இடம் அனைத்து மதத்தினருக்கும் உரியது என்பதை உணர்த்தகுரு அர்ஜுன் தேவ் செய்த காரியம் இன்றைய சூழலில் யாரும் செய்யத்துணியாத ஒன்றாகும். அர்ஜுன் சிங் அவர்கள் ஹர்மந்திர் சாஹிப் கோயிலுக்கு லாஹூரில் வாழ்ந்து வந்த ‘மியான் மிர்’ என்ற முஸ்லிம் துறவியை அடிக்கல் நாட்டச்செய்தார்.
அழிவிலிருந்து மீண்டு வந்தது:
இந்த கோயில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அஹமத் ஷாஹ் என்ற இஸ்லாமிய மன்னனின் படையெடுப்பினால் அழிக்கப்பட்டு சில காலம் கழித்து புனரமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அதிக செல்வம் படைத்த ஆன்மீக ஸ்தலங்களாக திகழும் திருப்பதி ஏழுமலையான் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் போன்றவற்றிக்கு எல்லாம் முன்னோடி இந்த ஹர்மந்திர் சாஹிப் தான்.
தங்கமான பளிங்கு கல்:
பஞ்சாபின் அரசராக இருந்த ரஞ்சித் சிங் பளிங்கு கல்லினால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலின் சுவர் முழுக்க தங்க தகடுகளை பதிக்கப்பட காரணமாகவும் இருந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 100கிலோ தங்கத்தை கொண்டு ஹர்மந்திர் சாஹிபின் சுவர் மற்றும் கூரை ஆகியவை தங்கத்தால் வேயப்பட்டிருக்கின்றன. அதோடு இக்கோயிலின் உட்புறத்தில் உள்ள சுவர்களில் வைரம், வைடூரியம் போன்ற விலைமதிக்க முடியாத கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
சாகவரம் அளிக்கும் அமிர்த குளம்:
இக்குளத்தில் இருக்கும் நீர் சாகவரம் அளிக்கும் அமிர்தத்திற்கு நிகரானதாக சொல்லப்படுகிறது. இந்த குளத்தில் ஏராளமான தங்க மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய சமையல் அறை:
பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ‘லங்கர்’ 3 வேலையும் இலவசமாக உணவு பரிமாறப்படுகிறது. இங்கு மட்டும் தினமும் மூன்று வேலையும் சேர்த்து ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. இதற்க்கான மூலப்பொருட்களான கோதுமை, பருப்பு மற்றும் காய்கறிகள் அனைத்தும் பலராலும் நன்கொடையாக வழங்கப்படுகிறது.
லங்கருக்கு சாப்பிட வரும் பக்தர்கள் உணவு தயாரிப்பு, பரிமாறுதல், சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்துதல் போன்ற காரியங்களில் தாமாக முன்வந்து சேவையாற்றலாம்.
பாதுகாவலர்கள்:
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹேப் கோயிலை பாதுக்காக்கும் பணியில் பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்களை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இன்றும் வாள் ஏந்தியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். நீல நிறத்தில் உடையணிந்திருக்கும் இவர்கள் மற்றவர்களை காட்டிலும் மிகப்பெரிய தலைப்பாகையை கொண்டிருக்கின்றனர்.
புனித நூல்:
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் கோயிலினுள் சீக்கியர்களின் புனித நூலான ‘குரு கிரந்த சாஹிப்’ வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் கோயிலை நிறுவிய குரு அர்ஜுன் என்பவரே இந்நூலை இயற்றியிருக்கிறார். இக்கோயிலினுள் குரு கிரந்த சாஹிப் நூல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து வரும் சீக்கியர்கள் இந்த புனித நூலின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து வழிபாடு செய்கின்றனர்.
தீபாவளி கொண்டாட்டம்:
தீப ஒளி திருநாளான தீபாவளி பொற்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கைகள், சிறப்பு வழிபாடுகள் என கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. வித்தியாசமாக தீபாவளியை கொண்டாட நினைப்பவர்கள் நிச்சயம் இந்த பொற்கோயிலுக்கு வரலாம்.