பிச்சாடனர் சிவபெருமான்: ஆருத்திரா தரிசனம் – திருவாதிரை விரதம்!

117

பிச்சாடனர் சிவபெருமான்: ஆருத்திரா தரிசனம் – திருவாதிரை விரதம்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. பிரதோஷ விரதம்
  2. சோமவார விரதம்
  3. உமா மகேஸ்வர விரதம்
  4. திருவாதிரை விரதம்
  5. மகாசிவராத்திரி விரதம்
  6. கல்யாண விரதம் (கல்யாண சுந்தரர், கல்யாண சுந்தர விரதம்)
  7. பாசுபத விரதம்
  8. அஷ்டமி விரதம்
  9. கேதாரகௌரி விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது திருவாதிரை விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

திருவாதிரை விரதம்:

சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுகின்றனர்.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமான் மீது வேள்வி நடத்தினர். சிவபெருமான் (பிச்சாடனர்) பிச்சை எடுக்கும் வேடமேற்று முனிவர்களின் இல்லங்களுக்கு சென்றார். முனிவர்களின் பத்தினிகள், தங்களை மறந்து பிச்சை வேடத்தில் வந்த சிவபெருமான் பின்னே சென்றனர். இதனால், கோபமுற்ற முனிவர்கள் சிவபெருமான் மீது மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவனற்றை ஏவினர்.

சிவபெருமான் மத யானையை கொன்று குவித்து அதன் தோலை அணிந்து கொண்டார். முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு தனது தோற்றத்தை உணர்த்தினார். இது ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது. இது திருவாதிரை நாளில் நடைபெற்றதாக கருதப்படுகிறது. இந்த நாளில் சாப்பிடாமல் விரதமிருந்து சிவனை தரிசனம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். மேலும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த விர த த்தின் போது இறைவனுக்கு களி மற்றும் ஏழு கறி கூட்டு படைக்கப்படுகிறது.

திருவாதிரை விரதம் மேற்கொண்டால் புகழ், நீடித்த ஆயுள், செல்வம், நோயின்மை, திருமண வாழ்க்கை ஆகியவை கிடைக்கும். அதோடு, காலை தூக்கி நடனமாடி ஆருத்திரா தரிசனம் காண்பித்த சிவனுக்கு பிடித்த நடனக்கலையிலும் சிறக்கலாம். இந்த விரதத்தின் போது நடராஜர் வழிபடப்படுகிறார்.