புரட்டாசியில் அசைவம் கூடாது ஏன் தெரியுமா?

172

புரட்டாசியில் அசைவம் கூடாது ஏன் தெரியுமா?

ஆனி, ஆடி, ஆவணி போய் தற்போது புரட்டாசி மாதம்  பிறந்து விட்டது. கோயிலுக்கு செல்கிறவர்கள் வழக்கம் போல் கோயில்களுக்கு சென்று வருவார்கள். இதுவரையில் கறிக்கடைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஈக்கள் மொய்க்க ஆரம்பித்துவிட்டது. இனிமேல் ஒரு மாத த்திற்கு ஆடுகள், கோழிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று சொல்லலாம்.

பொதுவாகவே புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோயில்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதுவும் புரட்டாசி சனிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொருவரும் வீடுகளில் விரதமிருந்து சனிக்கிழமையில் பெருமாள் கோயிலுக்கு சென்று வருவார்கள். இதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அது என்ன என்பது குறித்து நாம் இந்தப் பதிவில் பார்ப்போம். ஜோதிடத்தில் வரும் 6ஆவது ராசியான கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன் பகவான். மகா விஷ்ணுவின் சொரூபம் புதன். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். சைவத்திற்குரிய கிரகம் தான் புதன். மேலும், புதன் பகவானுக்கு உரிய உணவு உப்பு, சப்பிலாத உணவு. துவர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகள் எல்லாம் புதன் பகவான் உணவுகள். இதில், அசைவ உணவுகள் வரவே வராது. புரட்டாசி பெருமாளுக்குரிய மாதம் என்பதால் பெருமாளை நினைத்து விரதம் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த மாதம் வயிறு தொடர்பான அஜீரணக் கோளாறு பிரச்சனைகள் வரும். உடல் வெப்பநிலையும் அதிகரித்து பித்தம் ஏற்படும். இதனால், இந்த மாதம் அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை ஜீரணமாகாமல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

வயிறு பிரச்சனைகள் ஏற்பட்டு கெட்டக் கொழுப்பு உடலிலேயே தங்கிவிடும். ஆதலால் தான் அசைவ உணவுகளை தவிர்த்து மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடுவதோடு, உடலுக்கும் வயிற்றிற்கும் நன்மை அளிக்கக்கூடிய துளசி நீரை குடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து மகாவிஷ்ணுவை வணங்குவதோடு உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

மற்றொரு காரணம்:

வெயில் குறைந்து மற்றும் மழை ஆரம்பிக்கும் மாதம் புரட்டாசி மாதம். ஆனால், பூமி குளிரும் அளவிற்கு மழை இருக்காது. ஆனால், கோடை வெயிலால் சூடாகி இருந்த பூமியானது லேசான மழையால் மழைநீரை ஈர்த்து வைத்துக் கொண்டு இந்த மாதத்தில் வெப்பத்தை குறைக்க தொடங்கும். இதனால், சூட்டைக் கிளப்பும் மாதம் என்று புரட்டாசி மாதத்தை சொல்வார்கள். அதோடு, வெயில் கால வெப்பைக் காட்டிலும் இந்த சூட்டைக் கிளப்பும் சூடானது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் அசைவம் சாப்பிட்டால் மேலும் உடலுக்கு சூடுதான் வரும். அதோடு, வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக புரட்டாசி மாதங்களில் அசைவ உணவுகளை தவிர்த்தனர். இந்த மாதம் நோய் தொற்றுகளை உருவாக்கும். ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி உண்டாகும். அதுமட்டுமல்லாமல், இந்த புரட்டாசி மாதம் நவராத்திரி பண்டிகை வரும். முன்னோர்கள் வீடு தேடி வரக்கூடிய மகாளய பட்சம் 16 நாட்கள். இப்படி தொடர்ந்து பண்டிகை தினங்களாக இருப்பதாலும் அசைவ உணவுகளை தவிர்க்கின்றனர்.