பெண்கள் மட்டுமே தூக்கும் அம்மன் பல்லக்கு!

86

பெண்கள் மட்டுமே தூக்கும் அம்மன் பல்லக்கு!

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று 7 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி வரும் 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

அம்மனுக்கு நவராத்திரி போன்று சிவனுக்கு சிவராத்திரி உண்டு. சிவராத்திரியை கொண்டாடுவதன் மூலமாக சிவனும், சக்தியும் ஒன்று என்பதை விளக்கும் கௌமாரியம்மன் தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்புரிகிறாள். மாரியம்மன், பராசக்தியின் அம்சமாக திகழ்கிறாள். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் காரணமாக சிவராத்திரி நாளன்று இரவில் மாரியம்மனுக்கு சிவபெருமானைப் போன்று அலங்காரம் செய்து பூஜிக்கப்படுகிறது.

அப்போது மாரியம்மனுக்கு, சிவபெருமானைப் போன்று நெற்றிக்கண் சூடி, தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவி, கையில் உடுக்கை, சூலம் ஆகியவற்றுடன் முக்கியமான உடையான புலித்தோல் நிற ஆடை அணிந்து அலங்கரித்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி சிவனுக்கு செய்யப்படும் 6 கால பூஜை போன்று அம்மனுக்கும் நள்ளிரவில் 6 கால பூஜையும் நடைபெறும். இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்தக் கோயிலில் உள்ள  உற்சவ அம்பாள் 4 தலை நாகத்திற்கு கீழ் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இவள் பல்லக்கில் எழுந்தருளி, பிரகாரத்தில் உலா செல்வாள். பெண்கள் மட்டுமே இந்தப் பல்லக்கை தூக்கி செல்வர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அம்மனுக்கு 21 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு அக்னி சட்டி, பூக்குழி இறங்குதல் ஆகிய நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது.