பெரியசாமி கோயிலில் தானாகவே இறந்துவிடும் பன்றி!

155

பெரியசாமி கோயிலில் தானாகவே இறந்துவிடும் பன்றி!

உலகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு விதமான அதிசயங்களும், வினோதமான சம்பங்களும் நடக்கும். பொதுவாக கோயிலுக்கு நமது கஷ்டங்களை சொல்லி முறையிடவும், வேண்டுதல் நிறைவேற்றவும், மன நிம்மதிக்காகவும் தான் கோயிலுக்கு செல்வோம். ஒவ்வொரு கோயிலிலும் விதவிதமான வழிபாடுகளும், பரிகாரங்களும் மேற்கொள்ளப்படும். அதே போன்று தான் பிரசாதங்களும் கோயிலுக்கு கோயில் வேறுபடும்.

பொதுவாக அம்மன் கோயில்களிலும், அய்யனார் கோயில்களிலும், அவரவர் குல தெய்வ கோயில்களிலும் சேவல், ஆடு பலி போடும் நிகழ்வு நடக்கும். ஆனால், இதுவே ஒரு பன்றி தானாகவே சென்று தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு எங்கேயாவது நடந்து பார்த்திருக்கிறோமா? அப்படியும் நடக்கும் ஒரு கோயில் தமிழ்நாட்டில் இருக்கிறது.

அந்த கோயில் குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் செட்டியா பத்து கிராமத்தில் உள்ள கோயில் பெரியசாமி கோயில். இந்தக் கோயிலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி, ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதி, ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதி, ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதி, ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதி என்று 6 சன்னதிகள் உள்ளன. இப்படி ஒரே கோயிலுக்குள் 6 தெய்வங்கள் 5 சன்னதிக்குள் இருப்பதால் என்னவோ இந்தக் கோயிலுக்கு 5 வீட்டு சுவாமிகள் கோயில் என்று பெயர் வந்தது.

ஜாதி, மதம் பேதமின்றி அனைவரும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயிலுக்கான செலவுகள் அனைத்தையும் பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டதாக வரலாறு கூறுகின்றது.

ஜாதி, மதம், தலைதூக்கிய ஒரு காலத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவன் இறைவனுக்கு பிரசாதம் படைத்து வழிபாடு செய்தான். அவன் படைத்த பிரசாதத்தை யாரும் வாங்கவில்லை. ஏனென்றால், அவன் ஒரு துப்புரவு தொழிலாளி அதோடு, அவன் குறைந்த அந்தஸ்து கொண்டவன் என்பதால், அவன் படைத்த பிரசாதத்தை யாரும் வாங்கிக் கொள்ள முன்வரவில்லை. இதனால், மன வேதனையடைந்த அந்த தொழிலாளி கோயில் வாசலிலேயே அழுது, புலம்பி சோர்வில் அங்கேயே உறங்கிவிட்டான்.

அப்போது அந்த தொழிலாளியின் கனவில் அந்த பெரியசாமிகள் பிரசாதத்தை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு அடுத்த வருடம் வந்து அதனை திறந்து பார்க்க சொல் என்று கூறிவிட்டு மறைந்து விட்டனர். இதையடுத்து, அந்த தொழிலாளி கோயிலின் தென் பகுதியில் ஒரு இடத்தில் பிரசாதத்தை வாழை இலை கொண்டு மூடி அதனை பானையோடு புதைத்து வைத்தான்.

பெரியசாமிகள் கூறியதைப் போன்று அடுத்த வருடம் அந்த கோயிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி புதைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பிரசாதத்தை தோண்டிப் பார்த்தான். ஆனால், அந்த பிரசாதமான அப்பொழுது தான் செய்தது போன்று ஆவி பறக்க பறக்க இருந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் அந்த பிரசாதத்தின் மகிமை கண்டு அது தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். அப்போது முதல் இந்தக் கோயிலி யாரும் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த 5 வீட்டு சுவாமிகளின் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய என்ற மந்திரம் கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு வந்து இந்த மந்திரத்தை சொல்லி இறைவனிடம் வேண்டிக் கொண்டால், திருமணத் தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நவக்கிரக தோஷங்கள் நீங்கும், மன தைரியம் அதிகரிக்கும், நிம்மதி உண்டாகும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், வளமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம். இந்த கோயிலில் ஒரு வினோதமான நிகழ்வு நடக்கிறது. அதாவது, பெரியசாமி கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் பன்றியானது, கோயில் விழாவின் போது அங்குள்ள தொட்டிக்குள் இருக்கும் தண்ணீருக்குள் தானாகவே தலையை மூழ்கடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறது.