மகா கௌரி தேவி வழிபாடு!

121

மகா கௌரி தேவி வழிபாடு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி 14 மற்றும் 15ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

அதன்படி, இந்தப் பதிவில், துர்க்கையின் 8ஆவது அம்சமான மகாகௌரியை வழிபடுகின்றனர். மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானது என்றும் பொருள்படும். இவள் வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறாள். ஒரு காலத்தில் பார்வதி சிவனை நோக்கி தவம் செய்த போது அவளது உடல் முழுவதும் மண் சூழ்ந்து கருமையானது.

பார்வதியின் தவத்தால் மனம் மகிழ்ந்த ஈசன் அவளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதற்கு முன் தேவியை கங்கை நீரால் நீராட்டினார். இதன் காரணமாக தேவியின் உடல் பால் போன்று வெண்மையானது. இவளே மகாகௌரி.

நான்கு கரங்கள் கொண்டு காணப்படும் மகா கௌரி, தனது ஒரு கரத்தில் சூலத்தையும், மற்றொரு கரத்தில் மணியையும் தாங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்களில் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன. இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும். மகா கௌரியின் அருள் கிடைத்தால் நம் வாழ்வு வசந்தமாகும்.

மகா கௌரியின் மந்திரம்:

ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின்

மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா

காளையின் மீது ஏறி வருபவளும், வெண்மை நிற ஆடை அணிந்தவளும், தூய்மையின் அடையாளமாக இருப்பவளுமான மகா கௌரியே எனக்கு அனைத்து நன்மைகளையும், வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் பகுதியில் மகாகௌரி கோயில் உள்ளது.