முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பூஜை செய்யலாமா?

71

முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பூஜை செய்யலாமா?

பூஜையறையில் சாமி படங்களுடன் சேர்த்து முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்து பூஜை செய்யலாமா? கூடாதா? என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் பார்ப்போம்…

பொதுவாக சாப்பிடும் போது நம்மை யாரோ நினைத்தால் புரை ஏறும். அது போன்று நம்மை யாரோ திட்டினாலும் நாக்கை கடித்துக் கொள்வோம். அப்போது, யாரோ நினைக்கிறாங்க, யாரோ திட்டுறாங்க என்றெல்லாம் நாம் சொல்லிக் கொள்வோம். ஆனால், யார் நினைத்தால், யார் திட்டினார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியாது. அது போலத்தான் கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டி நமக்கு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டு வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொல்வார்கள்.

அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். அதற்கு காரணம், நம்முடைய முன்னோர்களின் புகைப்படமோ, நமது குலதெய்வத்தின் புகைப்படமோ அந்த காலத்தில் இருந்ததில்லை. அந்த நேரங்களில் முன்னோர்களை, குல தெய்வத்தை வழிபடும் போது கண்ணாடியை வைத்து வழிபட்டுள்ளனர். அதில், நமது முன்னோர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி நம்மை ஆசிர்வதிப்பதாக கருதி முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வழிபட்டுள்ளனர்.

முன்னோர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து வணங்கினாலும், கண்ணாடியை வைக்காமல் வணங்கினால், அவர்களை மகிழ்விக்க முடியாது. அவர்களது ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்காது என்கிறது சாஸ்திரம். இதனால், தான் வீட்டு பூஜையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்து வழிபட்டுள்ளனர். நாளடைவில், அந்தப் பழக்கம் மாறிவிட்டது. ஏனென்றால், வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முகத்தை அழகுபடுத்தவும், படுக்கையறை, குளியல் அறை, வரவேற்பறை என்று அனைத்து இடங்களிலும் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கின்றனர்.

கண் திருஷ்டியை போக்கவும், நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கவும் முகம் பார்க்கும் கண்ணாடியை பயன்படுத்துவதில்லை. கண் திருஷ்டியை போக்க வீட்டு வாசல்படிக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால் கண் திருஷ்டியால் எந்த பாதிப்பும் வராது. அது போல, நமது முன்னோர்கள் பின்பற்றிய வீட்டு பூஜையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பூஜை செய்து வந்தால், அவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.