முருகனின் பெயர்களுக்குரிய அர்த்தம் தெரியுமா?

54

முருகனின் பெயர்களுக்குரிய அர்த்தம் தெரியுமா?

பொதுவாக இறைவனின் பெயர்களை குறிப்பாக முருகப் பெருமானின் பெயர்களை தங்களது மகன்களுக்கு வைப்பது தமிழர்களின் வழக்கம். முருகன், குமரன், வடிவேல், சரவணன், கந்தன், தண்டபாணி,  சுப்பிரமணியன், ஆறுமுகம் (சண்முகம்) என நூற்றுக்கணக்கான முருகன் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

தமிழ்ச்செல்வன், என்று வைத்தால்கூட முருகனைக் குறிக்கும் பொருளைத் தரும். சிவக்குமார் என்பது கூட சிவனின் மைந்தனான முருகப் பெருமானைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. முருகன் எழுந்தருளியிருக்கும் ஊர்ப்பெயர்களையும் குன்றப் பெயர்களையும் சூட்டுவதைக் காணலாம். பழனி, மருதமலை, தணிகைவேல், சென்னிமலை, கதிர்காமர் என முருகனின் ஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களாகின்றன.

முருகனைக் குறித்து வைக்கப்படும் பெயர்களில் தலையாயது ’செந்தில்’ என்பது. செந்தில்குமரன், செந்தில்வேலன், திருச்செந்தில் என்று பத்தில் ஒருவர்க்குச் செந்தில் என்ற பெயர் இருப்பதைக் காணலாம். கூட்டத்தில் ‘செந்தில்’ என்று கூப்பிட்டால் குறைந்தது நான்கைந்து பேராவது திரும்பிப் பார்ப்பார்.

செந்தில் என்றால் என்ன? இங்கே செந்தில் என்ற பெயருள்ளவர்க்கே செந்திலின் பொருள் தெரியாது. ஊர்ப்பெயர்கட்குச் சுருக்கப் பெயர்கள் உள்ளன. உதாரணத்திற்கு கோயம்புத்தூருக்குக் கோவை என்பது சுருக்கப் பெயர். உதகைமண்டலம் ஊட்டி என்றானது. அவ்வாறு திருச்செந்தூரின் சுருக்கப் பெயர்தான் ‘செந்தில்’.

இனிச் செந்தில் என்ற சொல்லினை எங்கே கண்டாலும் அது திருச்செந்தூரைக் குறிக்கும். செந்தில் குமரன் என்றால் திருச்செந்தூர்க் குமரன். செந்தில் முருகன் என்றால் திருச்செந்தூர் முருகன். செந்திலாண்டவர் என்றால் திருச்செந்தூர் ஆண்டவர்.