மூன்றாம் பிறை தரிசனம் வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

59

மூன்றாம் பிறை தரிசனம் வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

ஒவ்வொரு மூன்றாம் பிறையும் அந்தந்த நாளின் நட்சத்திர, யோக, கரண கால நிலைகளுக்கு ஏற்ப, பல அற்புதமான நல்வரங்களைத் தருகின்றது. “வெறும் மூன்றாம் பிறைத் தரிசனம் தானே அப்படி என்ன அது விசேஷமான சக்திகளைத் தந்து விடப் போகின்றது?” என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம்:

முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தெய்வ மூர்த்தியரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை ஸ்ரீசந்திர சூட சிவ தரிசனமாக, ஸ்ரீசந்திர மௌலீஸ்வர தரிசனமாக, ஸ்ரீசந்திர சேகர தரிசனமாகவும், போற்றி வழிபடுவதால், நாம் தேவாதி, தேவ, தெய்வாதியருடன் இணைந்து, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுகின்றோம் என்ற உத்தம பாக்ய நிலையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்.

மனதைச் சுத்திகரிக்கும் தரிசனம்:

மனதால் செய்த பாவங்களுக்கு நல்ல விமோசனம் தரும் தரிசனம். குறிப்பாக, வாயால் பேசிய தீய வார்த்தைகளுக்கும், மனதால் பேசிய கொடிய வார்த்தைகளுக்கும், மனதில் உருவாகும், விகாரமான கேவலமான எண்ணங்களுக்கும் தக்க பிராயச் சித்தத்தைத் தரக் கூடிய தரிசனம்.

சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கமான நற்குணத்தைத் தர வல்ல தரிசனம். வேத மந்திரங்களை ஓத முடியவில்லையே என்று ஏங்கி வருந்துவோர்க்கு வேத மந்திரப் பலாபலன்களைத் தர வல்ல தரிசனம்.

வெளியில் சொல்ல இயலாதபடி விகாரமான எண்ணங்களில் உழல்வோருக்கு, மனசுத்தியைப் பெற உதவும் பரிகாரங்களைத் தரும் தரிசனம். இவ்வாறாக, வானில் சில நிமிடங்களே தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், மனவளப் பலன்களை அபரிமிதமாகத் தர வல்லதாம். உண்மையில் மனம் அமுத ஒளி நதியில் புண்ணியமயமாகப் புனித நீராடுவதாகவே, சித்தர்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பாங்கினைக் குறிக்கின்றனர்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம்.