ரத சப்தமியில் விரதமிருந்து சூரியனை வழிபட்டால் அரசு வேலை!

348

ரத சப்தமியில் விரதமிருந்து சூரியனை வழிபட்டால் அரசு வேலை!

எல்லோருமே அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், எல்லோருக்குமே அரசு வேலை கிடைத்து விடாது. அரசு வேலைக்கும் சூரிய பகவானுக்கும் தொடர்பு உண்டு. சூரிய பகவானின் அருள் இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு செல்வ செல்வாக்கும், பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி நாளன்று ரத சப்தமி விரதம் இருந்து சூரிய பகவானை வணங்கினால் அரசு வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உத்ராயண தை அமாவாசைக்கு அடுத்து வரும் 7ஆவது நாள் சப்தமி திதி ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. ரத சப்தமி நாளில் தான் சூரிய தேவன் பிறந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாளில் சூரிய பகவானுக்கு விசேஷமான ஒளி பிறப்பதாக சொல்லப்படுகிறது. ஆதலால், இந்த நாளில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுபவர்கள், தங்களது பாவங்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

காஷ்யப் மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த போது கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு உணவு பரிமாறிய பிறகு மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள். இதனால், கோபமடைந்த அந்த அந்தணர், கர்ப்பத்தை பாதுகாப்பதாற்காக தர்மத்தை புறக்கணித்துவிட்டு மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அதிதி தனது கணவரிடம் நடந்தவை குறித்து விவரித்தாள். இதையறிந்த காஷ்யப் முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த இந்த உலகிலிருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று உறுதியளித்தார். அதன்படியெ ஒளி பொருந்திய புத்திரன் ஒருவர் அவர்களுக்கு கிடைத்தார். அவரே உலகைக் காக்கும் சூரியன் ஆவார்.

சூரியன் பிறந்த நாள் திதிகளில் 7ஆவது நாள் சப்தமி திதி ஆகும். அந்த நாளில் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து சூரிய உதயத்திற்கு முன்னதாக புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது என்பது சிறப்பு ஆகும். அப்படி புண்ணிய நதிகளுக்கு சென்று நீராட முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

குளிக்கும் போது சூரிய பகவானுக்குப் பிடித்த எருக்கன் இலை 7 அல்லது 9 எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண் என்றால், அதோடு விபூதி, பெண் என்றால் மஞ்சள் பொடி வைக்க வேண்டும். குளிப்பதற்கு முன்பாக எருக்கன் இலை அடுக்கைத் தலை மீது வைத்து குளிக்க வேண்டும்.

சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிட்டாலும், ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா என்று சூரிய பகவானைப் பார்த்து கூறி 3 முறை வணங்க வேண்டும்.

அப்போது,

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி!

ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி!

தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய!

என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். எருக்கன் இலையை தலை மீது குளிப்பதன் மூலமாக, சூரியனின் 7 வகைக் கதிர்கள் எருக்கன் இலை வழியாக இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து உடலில் உள்ள தீராத நோய்களையும் நீக்கும். குளித்து முடித்த பிறகு சூரியனின் ஒளி படும் ஒரு இடத்தில் செம்மண் கொண்டு மொழுகி சூரிய ரத கோலம் போட வேண்டும், அதில், சூரிய சந்திரர்களை வரைந்து கொள்ள வேண்டும். இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். முதலில் கணபதி பூஜை, பின், சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். இந்தப் பூஜையைச் செய்தால், சூரியன் சாந்தம் அடைந்து பூஜை செய்பவர்களுக்கு வளமும், நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பார்.

கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி தரிசனம் செய்தால், பாவல் எல்லாம் நீங்கும். ரத சப்தம நாளான இன்று செய்யப்படுகிற தான, தர்மங்கள் 100 மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்பது ஐதீகம். மேலும், பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.

சூரிய காயத்ரி மந்திரம்

ஓம் பாஸ்கராய வித்மஹே

திவாகராய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

சூரிய பகவான் மந்திரம்:

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்!

நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். ரத சப்தமி விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.

அரசு வேலை வேண்டும் அரசில் உயர் பதவி வேண்டும். சிறந்த அரசியல்வாதிகளாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ரத சப்தமி நாளில் விரதம் தொடங்கலாம். ஞாயிறுக்கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் இந்த மந்திரங்களை உச்சரித்து சூரியனை வணங்க நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.