விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது?

132

விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது?

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும். இந்த மாதத்தில் வரும் முதல் 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு தசமி திதியில் தீமை அழிக்கப்பட்டு நன்மை வெற்றியடைந்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் கடைசி நாளான தசராவைக் கொண்டாடிய மக்கள் 10ஆவது நாளான தசமி அன்று விஜயதசமி நாளுடன் நிறைவு செய்கின்றனர்.

பொதுவாக விஜய் என்றாலே அது வெற்றியின் அடையாளம். வெற்றியைக் குறிக்கும். மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்கா தேவி வீழ்த்தி வெற்றி கொண்ட நாளைத் தான் இந்த விஜய்தசமி குறிக்கிறது. புராணங்களின் படி, மகிஷாசுரன் தேவலோகம், பூலோகம் மற்றும் பாதாள லோகம் ஆகிய 3 உலங்கலையும் ஆட்சி செய்ய விரும்பினான். இதற்காக தேவலோகத்தில் தேவர்களுக்கு எல்லாம் தலைவனான இந்திரனுடன் போர் புரிந்தான்.

எனினும், தேவர்களுடன் போர் புரிந்து அவர்களை தோற்கடிக்க இயலவில்லை. இதனால், படைக்கும் தொழில் புரியும் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக பிரம்மாவிடமிருந்து ஒரு வரம் வேண்டினான். அதாவது தனக்கு சாகா வரம் வேண்டும் என்று வேண்டினான். ஆனால், பிரம்மரோ அவனுக்கு, தேவர்கள், மனிதர்கள் மற்றும் அரக்கர்களால் அழிவே வரவே முடியாத ஒரு வரம் அளித்தார்.

தன்னை யாராலும் அழிக்க முடியாத என்ற நிலையில், மூவுலகிலும் மகிஷாசுரன் தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்து வந்தான். அவனது தொல்லையிலிருந்து தப்பிக்க தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். ஆனால், அவரோ தனது வரத்தை திரும்ப பெற முடியாத நிலையில், அவரால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. இதனால், தேவர்கள் அனைவரும் விஷ்ணு பகவானிடம் முறையிட்டனர். அவரோ, சிவபெருமானிடம் சென்று முறையிடுமாறு அனுப்பி வைத்தார்.

சிவபெருமான், அனைத்து தேவர்கள், கடவுள்களையும் ஒன்று சேர்த்து அவர்களது ஒட்டுமொத்த சக்தியின் அடையாளமாக துர்கா தேவியை உருவாக்கினார். கடவுள்கள் மற்றும் தேவர்கள் கொடுத்த ஆயுதங்களை தனது 10 கரங்களில் தாங்கியபடி துர்கா தேவி காணப்பட்டார். மேலும், சிங்கத்தை தனது வாகனமாகவும் கொண்டுள்ளார்.

இதையடுத்து, தைரியம் இருந்தால் என்னோடு போர் புரிந்து வெற்றி பெறுமாறு மகிஷாசுரனிடம், துர்கா தேவி கூறினார். மகிஷாசுரனோ தனது வரத்தின் மீது நம்பிக்கை வைத்து போர் புரிய தயாரானான். துர்கா தேவி மற்றும் மகிஷாசுரன் இருவருக்கும் இடையிலான போர் 9 நாட்கள் வரை நடந்தது. துர்கா தேவி 10ஆவது நாளில் மகிஷாசுரனை வதம் செய்தார்.

இதன் காரணமாக துர்கா தேவிக்கு முதல் 3 நாட்களும், லட்சுமி தேவிக்கும் நடுவில் உள்ள 3 நாட்களும், சரஸ்வதி தேவிக்கு கடைசி 3 நாட்களும் என்று மொத்தமாக நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு, மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற 10 ஆவது நாளான தசமி திதியில், விஜய் என்றால் வெற்றி என்பதை குறிக்கும் வகையில் இந்த விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.